×

தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் ₹1.30 கோடி மதிப்பீட்டில் காசநோய் சிகிச்சை மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

தாம்பரம்: தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் ₹1.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட காசநோய் சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தாம்பரம், சானடோரியம் பகுதியில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் ₹1.30 கோடி மதிப்பில் 12 படுக்கைகள் கொண்ட ஆண் பிரிவு, 12 படுக்கைகள் கொண்ட பெண் பிரிவு என மொத்தம் 24 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் கொண்ட காசநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு காசநோய் சிகிச்சை மையததை திறந்து வைத்து பேசியதாவது:
பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த மருத்துவமனையில், இன்னும் ஐந்தாண்டுகளில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டுக்கு பின் கொண்டாடப்படும் நூற்றாண்டு விழாவில், நிச்சியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார். அன்று இந்த மருத்துவமனை வளாகத்தில் ஒருவர்கூட நெஞ்சக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்ற நிலையில் கொண்டாடப்படும். முதல்வர் கட்டளையின்படி 2025க்குள் காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கிய நோக்கி பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கிறது. யார் காசநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை கண்டறிகிற முயற்சி மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றுடன் 30.6.2021 அன்று ₹3 கோடி மதிப்பீட்டில் மூன்றாம் நிலை காசநோய் கிருமி கட்டுப்படுத்தலுக்கான ஆய்வகமும், 14.4.2022 அன்று ஒன்றரை கோடி மதிப்பீட்டில் பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவு மையமும், 29.12.2022 அன்று இரண்டரை கோடி மதிப்பீட்டில் சிடி ஸ்கேன் மற்றும் 30.6.2021 அன்று ₹1 கோடி மதிப்பில் நடமாடும் காசநோய் கண்டுபிடிப்பு வாகனம், 16.12.2021 அன்று ₹28 லட்சம் மதிப்பில் 255 கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளும், 24.12.2021 அன்று ₹28 லட்சம் மதிப்பீட்டில் 325 கே.வி திறன் கொண்ட மின் உற்பத்தி இயந்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் ரவிச்சந்திரன், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

95 ஆண்டுநிறைவு
இந்த மருத்துவமனை துவங்கப்பட்டு 95 ஆண்டுகளை நிறைவு பெற்று இருந்தாலும், 95 ஆண்டுகால வரலாற்றில் வேறு எப்போதுமே இல்லாத அளவிற்கு இவ்வளவு வசதிகள் இந்த மருத்துவமனைக்கு தொடர்ச்சியாக கடந்த 2 ஆண்டு திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது. எனவே, நிச்சயம் இன்னமும் என்னை தேவை இருக்கிறது என்று எங்களுக்கு தெரிவித்தால் உடனடியாக செய்து கொடுப்போம், என அமைச்சர் தெரிவித்தார்.

ஊட்டச்சத்து பொருட்கள்
காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியோடு 6 மாத புரதசத்து உடன் கூடிய ஊட்டச்சத்து பொருட்களை தருகின்ற முயற்சியை தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை மேம்படுத்தி தரம் உயர்த்துவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் தமிழ்நாடு முதல்வர் செய்வதற்கு தயாராக இருக்கிறார், என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

The post தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் ₹1.30 கோடி மதிப்பீட்டில் காசநோய் சிகிச்சை மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tuberculosis Treatment Center ,Tambaram Government Chest Hospital ,Minister ,M.Subramanian ,Tambaram ,Tuberculosis Treatment ,Center ,Government Chest ,Hospital ,
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...