×

6 வழிப்பாதை திட்ட பணிக்காக பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டிடங்களை அகற்றும் பணிகள் தீவிரம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

சென்னை: ஆறு வழிப்பாதை திட்ட பணிக்காக பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டிடங்களை அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரை மாமல்லபுரம், புதுச்சேரி, சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரியை இணைக்கும் முக்கிய தடமாக கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்) அமைந்துள்ளது. இந்த சாலையில் 100க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளதாலும், பொழுதுபோக்கு தளங்களான கோவளம் கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரை, கோயில்கள் மற்றும் முட்டுக்காடு படகுசவாரிகள், நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளதாலும் தினம்தோறும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

குறிப்பாக, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் கிழக்கு கடற்கரை சாலையில் வழக்கமாக செல்லும் வாகனங்களை விட கூடுதலான வாகனங்கள் செல்வது வழக்கம். விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் முதலில் தேர்வு செய்வது பாண்டிசேரி தான், இதனால் வார இறுதி நாட்களில் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். எனவே, இந்த சாலையை, திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கி.மீ. தூத்திற்கு 6 வழிச்சாலையாக அகலப்படுத்த நில எடுப்பு பணிக்காக தமிழக அரசால் 2005ம் ஆண்டு நவ.11ம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 6 இடங்களில் நில எடுப்பு பணி நடந்து வருகிறது. இதில், பாலவாக்கம் கிராமத்தில் இடைக்கால இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு நில ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. பின்னர், கிழக்கு கடற்கரை சாலையோரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, தற்போது, பாலவாக்கம் பகுதியில் சாலையோர கட்டிடங்களை பொக்லைன் இயந்தரங்கள் மூலம் இடிக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘6 வழிப்பாதை திட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையின் மையத்தில் 12 மீட்டர் அகலத்திற்கு மைய தடுப்பு சுவர், தடுப்பு சுவரின் இருபுறமும் 11 மீட்டர் அகலத்திற்கு 3 வழித்தடம், 1.65 மீட்டர் அகலத்திற்கு பேவர் பிளாக் தளம் மற்றும் 2 மீட்டர் அகலத்திற்கு மழைநீர் வடிக்காலுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, பாலவாக்கம் பகுதியில் 6 வழித்தடமாக அகலப்படுத்தும் பணி 2019ம் ஆண்டு ரூ.15.85 கோடிக்கு நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. 2ம் கட்டமாக கொட்டிவாக்கம் கிராமத்தில் 6 வழித்தடமாக அகலப்படுத்தும் பணிக்கு 2021ம் ஆண்டு ரூ.17.16 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இப்பணிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

2023ம் ஆண்டு இப்பணிகள் முழுமையாக முடிவடையும். மேலும், 3ம் கட்டமாக நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்நல்லூர் பகுதிகளில் 6 வழித்தடமாக அகலப்படுத்தும் பணிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.126.947 கோடிக்கு ஒப்புதல் வழங்கி, ரூ.134.575 கோடிக்கு தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த பணிகள் 2024ம் ஆண்டுக்குள் முடிவடையும்,’’ என்றனர்.

The post 6 வழிப்பாதை திட்ட பணிக்காக பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டிடங்களை அகற்றும் பணிகள் தீவிரம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Palavakkam East Coast Road ,Highways Department ,Chennai ,Dinakaran ,
× RELATED துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை...