×

பிபர்ஜாய் நாளை மறுநாள் கரையை கடக்கிறது குஜராத் கடலோர பகுதியில் 144 தடை உத்தரவு: 7500 பேர் பத்திரமாக வெளியேற்றம்

அகமதாபாத்: அரபிக் கடலில் உருவாகி உள்ள பிபர்ஜாய் புயல் வரும் 15ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என்பதால் கடலோர பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்த புயலானது துவாரகாவுக்கு தெற்கு-தென்மேற்கில் 380 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஜூன் 15ம் தேதி குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவு துறைமுகம் – பாகிஸ்தானின் கராச்சி இடையே கரையைக் கடக்கும், அப்போது காற்று மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து குஜராத்தில் கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வரை பள்ளிகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ம் தேதி புயல் கரையைக் கடக்கக் கூடும் என்பதால், ஜூன் 16 வரை கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. கட்ச், சவுராஷ்டிரா மாவட்டங்களில் சுமார் 7,500 பேர், போர்பந்தரில் 3,000, துவாரகாவில் 1,500 என மொத்தம் 7,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையின் 12 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த பிபர்ஜாய் புயல் தொடர்பான ஆய்வு கூட்டத்தில், புயல் பாதிக்கும் பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை அதிகாரிகள் உறுதிபடுத்தவும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு தயார்நிலையில் இருக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமரின் முதன்மை செயலர் பி.கே. மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா, புவி அறிவியல் துறை செயலர் எம். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேசிய பேரிடர் மீட்பு படை தயார்
அமைச்சரக செயலாளர் ராஜீவ் சவுபா தலைமையில் நடந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தில், பிபர்ஜாய் புயலையொட்டி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் 21,000 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையின் 12 குழுக்கள் குஜராத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 3 கூடுதல் குழுக்கள் மாற்று ஏற்பாடாக நிறுத்தப்பட்டுள்ளன. இது தவிர, தமிழ்நாட்டில் அரக்கோணம், ஒடிசாவில் முந்த்லி, பஞ்சாபில் பதின்டாவில் தலா 5 குழுக்கள் என மொத்தம் 15 குழுக்கள் விமானம் மூலம் செல்வதற்கு தயார்நிலையில் உள்ளன.

The post பிபர்ஜாய் நாளை மறுநாள் கரையை கடக்கிறது குஜராத் கடலோர பகுதியில் 144 தடை உத்தரவு: 7500 பேர் பத்திரமாக வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Bibarjoy ,Gujarat ,AHMEDABAD ,Arabian Sea ,
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி