×

தாமரை அடிமேல் அடி அடித்ததால் கலங்கிப் போயிருக்கும் இலை கட்சி தலைவர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘லேட்டானாலும் லேட்டஸ்டாக கிடாவை வெட்டி கறி விருந்து போட்ட எம்எல்ஏ யாராம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்துல வீரமான தொகுதியில் இலை கட்சியை சேர்ந்தவரு எம்எல்ஏவா இருக்காராம். தேர்தல் நேரத்துல ஆதரவு கேட்டு மாஜியை போய் பார்த்தாராம். எனது சீட்டை பறித்துவிட்டு என்னிடமே ஆசிர்வாதம், ஆதரவு கேட்பியா, உனக்கு என்ன தைரியம் என்று சொல்லி எம்எல்ஏ சீட் வாங்கிய இலை கட்சி நபரை விரட்டி அடிச்சாராம். மேலும், நீ இந்த தேர்தலில் எப்படி ஜெயித்துவிடுவாய் என்று பார்த்துவிடுகிறேன் என்று சவால் விட்டு, தன் வீட்டில் இருந்து துரத்தியடித்தாராம்.

இதனால அவமானப்பட்டுபோன அவர், குரால்நத்தத்தில் உள்ள கோயிலுக்கு போனாராம். என்னை எப்படியாவது வெற்றி பெற வைச்சிடணும்… உனக்கு கிடா வெட்டி பூஜை செய்றேன்னு மன்றாடினாராம். மேலும் ஜெயித்தே தீருவேன்னு சபதமும் போட்டுக்கிட்டு வந்திருக்காரு. அதன்படியே அவரும் ஜெயிச்சிட்டாராம். ரெண்டு ஆண்டை தாண்டிய நிலையில், ஏன் இன்னும் கிடா வெட்டலன்னு கனவு வந்திச்சாம். ஆத்தா என்னை மன்னிச்சிருன்னு சொல்லிட்டு பயந்துபோன எம்எல்ஏ, இப்போ சபதத்தை நிறைவேற்றிட்டாராம். அப்போது கட்சிக்காரங்களை அழைச்சிட்டு போய் ஐநூறு பேருக்கு கறி விருந்து போட்டாராம். தேர்தலில் ஜெயிச்சாச்சு… பிரார்த்தனையை நிறைவேற்றியாச்சு… இப்ேபாது தன்னை அவமதித்தவரை என்ன செய்யலாம் என்று இலை கட்சி எம்எல்ஏ யோசித்து கொண்டிருக்காராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘விட்டமின் ப கொடுத்து கூட்டத்தை கூட்டிய குக்கர் கட்சி பொறுப்பாளர்கள் டென்ஷனில் இருந்தாங்களாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தில் குக்கர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. சேலம்காரர் நடத்திய பொதுக்கூட்டத்தை விட அதிகளவு தலைகள் இருக்க வேண்டும். டெல்டா மாவட்டத்தில் குக்கர் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்க இது ஒரு சான்ஸ். மாவட்டம் முழுவதும் ஒரு தொண்டரை கூட விடாமல் அழைத்து வரவேண்டும் என மாவட்ட பொறுப்பாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே குக்கர் தலைமை அதிரடி உத்தரவு போட்டு இருந்ததாம். இதனையடுத்து மாவட்ட பொறுப்பாளர்கள், அவர்களது சொந்த வேலையையும் விட்டு விட்டு கடந்த 2 நாட்களாக கட்சியில் உள்ள 2வது கட்ட நிர்வாகிகள், தொண்டர்களை நேரில் சந்தித்து பேசினாங்க. அப்போது அவர்கள், நாங்கள் வேலையை விட்டு தான் வர வேண்டும். வெயில் அதிகம் இருக்கு. கடந்த முறை குவாட்டர், பிரியாணி என சொல்லி விட்டு கடைசி நேரத்தில் ₹200 கொடுத்து ஏமாற்றியது போல் இந்த முறை எங்களை ஏமாற்ற முடியாது. கடந்த முறை அமைதியாக போய் விட்டோம். ஆனால் இந்த முறை அப்படியெல்லாம் அமைதியாக களைய மாட்டோம். ஆர்ப்பாட்டம் வேண்டாம் என்றால், குவாட்டர், பிரியாணி, ₹500 கொடுத்து விட வேண்டும் என கறாராக சொல்லி விட்டார்களாம்.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான மாவட்ட பொறுப்பாளர்கள், இந்த விவகாரத்தை குக்கர் தலைமையிடத்துக்கு கொண்டு சென்றால் இருக்கிற பதவியும் பறிபோய் விடும். இதனால் வேற வழியில்லாமல் மாவட்ட பொறுப்பாளர்கள் கடன் வாங்கி தொண்டர்களுக்கு தலா ₹500, பிரியாணி, குவாட்டர் கொடுத்து தலைமைக்கு கூட்டத்தை கூட்டிட்டாங்க. இருந்தாலும் குக்கர் தலைமைக்கு எதிர்பார்த்த அளவில் திருப்தி இல்லாததால் மாவட்ட பொறுப்பாளர்களை கடிந்து கொண்டு சென்றாராம்… இவ்வளவு செய்தும் இவர் இப்படி பேசுகிறார். கடன்காரன் எப்ேபாது நம் வீட்டு கதவை தட்டப்போகிறானோ என்று புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க…’ என்றார் விக்கியானந்தா.
‘‘ சோதனையாக முடிந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர்ல தாமரை கட்சியோ 9 வருஷத்து சாதனைய விளக்குறதுக்காக பப்ளிக் மீட்டிங் நடத்துனாங்க. இந்த கூட்டம் வேட்பாளர் அறிமுக கூட்டம் போலவே இருந்ததாம். இலை கூட்டணியில இருக்குற கூட்டணி கட்சி தலைவரும், மீட்டிங்ல கலந்துகிட்டாரு. அதுமட்டுமில்லாம, வழிநெடுகிலும், தாமரை கட்சி, நீதிக்கட்சி பேனர்கள், கட்சி கொடிகள்னு கட்டியிருந்தாங்க. மேலும் 3 மாவட்டங்கள்ல இருந்து தலைக்கு இவ்வளவு கரன்சி என்று கொடுத்து செமையாக கவனித்து அழைத்து வந்தாங்க.

மேடையில பேசுன அந்த கட்சி நிறுவனரு, வெயிலூர் தொகுதியில தாமரை சின்னத்தில் 2014ல, போட்டியிட்டேன். அப்போ, கூட்டணிக்காரங்க, செஞ்ச துரோகத்தால வெற்றிய தவற விட்டுட்டேன். கடந்த 2019ல நடந்த தேர்தல்ல வெறும் 8 ஆயிரத்துக்கு குறைவான ஓட்டு வித்தியாசத்துல கட்சியில இருக்குற சதிகாரர்களால தோற்றுட்டோம்னு சொன்னாராம். இவரது பேச்சை கேட்ட இலைகட்சிக்காரங்க கடும் அதிருப்தியில இருக்காங்களாம். இன்னும் தொகுதியே முடிவு ஆகாத நிலையில, இந்த கட்சி நிறுவனரு யாரை திருப்திபடுத்த இப்படி பேசி வர்றாருன்னு எரிச்சலில் இருந்தாங்களாம். இவர் பேசி முடிச்சதும், ஒன்றிய பவர்புல் அமைச்சரு தனது பங்குக்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காலதாமதம் ஏற்பட யார் காரணம். முன்னாடி இருந்த இலைகட்சிதான். கேள்வி, கேட்கணும்னா அவங்களத்தான் கேட்கணும்னு அடுத்த குற்றச்சாட்டு வைக்க, மேடையில இருந்த தாமரை கட்சிக்காரங்களே அலறிட்டாங்களாம். நீதிகட்சிக்காரர் ஒரு குண்டு போட, ஒன்றிய பவர்புல் மந்திரியும் அதைவிட இன்னொரு பெரிய குண்டா போட, நல்லா பத்தவெச்சிட்டிங்களேன்ற மாதிரி, சாதனைய விளக்க வேண்டிய கூட்டம், சோதனையா முடிச்சிப்போச்சுன்னு கூட்டத்துக்கு போய்ட்டு வந்தவங்க பேசிக்கிறாங்க. தாமரை தலைகள் இப்படி அடிமேல் அடி கொடுத்ததால் இலை கட்சி தலைகள் கலங்கிப் போயிருக்கின்றன..’’ என்றார் விக்கியானந்தா.

The post தாமரை அடிமேல் அடி அடித்ததால் கலங்கிப் போயிருக்கும் இலை கட்சி தலைவர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Lotus ,leaf party ,MLA ,Yaram ,Peter ,Mangani District ,Leaf ,wiki ,
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்