×

தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் இரணியல் ரயில் நிலையத்தை புறக்கணிக்கும் இன்டர்சிட்டி ரயில்: பயணிகள் தொடர்ந்து ஏமாற்றம்

நாகர்கோவில்: திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயிலுக்கு, இரணியலில் நிறுத்தம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருநெல்வேலி – திருச்சி இடையே கடந்த 2012ம் ஆண்டு முதல் இன்டர்சிட்டி ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர் போராட்டத்தின் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி முதல் நாகர்கோவில் டவுண் வழியாக திருவனந்தபுரம் வரை, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிப்பு செய்யும் போது நாகர்கோவில் டவுண் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களில் நிரந்தர நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான இரணியல் ரயில் நிலையத்தில், தற்காலிக நிறுத்தம் கூட கொடுக்கப்படவில்லை. இதனால் இரணியல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. அவ்வாறு பயணித்தாலும், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் இறங்கி, பேருந்துகள் மூலமே சொந்த ஊர்களுக்கு அவர்கள் செல்ல வேண்டும். நாகர்கோவிலிருந்து – திருநெல்வேலி மார்க்கம் பகலில் 10 மணி நேரம் ரயில் இல்லாத குறையை போக்க இன்டர்சிட்டி ரயில், திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. ஆனால் இந்த ரயிலுக்கு இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்காமல் இருப்பது, எந்த நோக்கத்துக்காக ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறவில்லை என்று பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.

இரணியல் ரயில் நிலையத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் நாகர்கோவில் ரயில் நிலையமும், மறுமார்க்கம் 15 கி.மீ தொலைவில் குழித்துறை ரயில் நிலையம் அமைந்துள்ளது. ரயில்வேத்துறைக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பாக அமையும். இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க செயலாளர் எட்வர்ட் ஜெனி கூறியதாவது : இரணியல் ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தில் வருவாய் அடிப்படையில் 27 வது இடத்தில் என்.எஸ்.ஜி. பிரிவு 5-ல் உள்ளது. வருவாய் அடிப்படையில் 2022-23ம் ஆண்டி ரூ.4. கோடியே 97 லட்சத்து 76 ஆயிரத்து 708 வந்துள்ளது. 4 லட்சத்து 11 ஆயிரத்து 405 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். தினசரி வருவாய் -1லட்சத்து 36 ஆயிரத்து 375 ரூபாயாக உள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு, 1,127 பயணிகள் வந்து செல்கிறார்கள். 24 ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற திருவனந்தபுரம் கோட்ட எம்.பி.க்கள் கூட்டத்தில் திருநெல்வேலி எம்.பி., பல்வேறு ரயில் நிறுத்தம் குறித்து எழுப்பிய கேள்விகளில், இன்டர்சிட்டி ரயிலுக்கு இரணியல் நிறுத்தம் குறித்து கோரிக்கை எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த ரயில்வே துறை, இந்த ரயில் நிலையம் வழியாக தற்போது செல்லும் ரயில்களின் எண்ணிக்கை ரயில்வே வாரியம் அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவாக இருக்கின்ற காரணத்தால் இந்த ரயிலுக்கு நிறுத்தம் அனுமதிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ரயில்வே வாரியம் புதிய ரயில் நிறுத்தங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நாகர்கோவில்- மங்களூர் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு திருவனந்தபுரம் – கொல்லத்துக்கு இடையே உள்ள சிறையின்கீழ் ரயில் நிலையத்துக்கு நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதை போல் சென்னை எழும்பூர் – குருவாயூர் மற்றும் மதுரை – காச்சுகுடா ஆகிய இரண்டு ரயில்களுக்கும் கொடைரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால்திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயிலுக்கு இரணியல் நிறுத்தம் அனுமதிக்கப்படவில்லை. இது இந்த பகுதி பயணிகளை மிகுந்த ஏமாற்றமடைய செய்துள்ளது. கடந்த முறை திருநெல்வேலி – ஜாம்நகர் ரயிலுக்கு குழித்துறைக்கு பதிலாக பாறசாலை ரயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தை ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, இரணியல் நிறுத்தம் என்பது மிகவும் அத்தியாவசியமானதாகும்.

எனவே குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து போராடி, இரணியல் ரயில் நிலையத்தில் இன்டர்சிட்டி ரயிலுக்கு நிறுத்தத்தை பெற வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் பல கோரிக்கைகளை ரயில்வே நிறைவேற்றி வருகிறது. எனவே இந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு கூறினார்.

The post தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் இரணியல் ரயில் நிலையத்தை புறக்கணிக்கும் இன்டர்சிட்டி ரயில்: பயணிகள் தொடர்ந்து ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Ranial train station ,Nagargo ,Trichy ,Thiruvananthapuram ,Raniri ,Tirunelveli ,Ranaiya train station ,Dinakaran ,
× RELATED 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்...