×

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சென்னை கிண்டி கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதியே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. திட்டமிட்ட தேதியில் குடியரசுத் தலைவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து குடியரசுத் தலைவரின் தேதியைப் பெற்று ஜூன் 15ம் தேதி மருத்துவமனையைத் திறக்க அரசு சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது குடியரசுத் தலைவரின் வருகை ரத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வரும் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பார் என கூறப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனை:

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2021 ஜூன் 3ம் தேதி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 97வது பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் – இரைப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கலைஞரின் நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் ரூ.240 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

The post சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai Kindi Multipurpose Hospital ,G.K. Stalin ,Chennai ,BC ,Kindy Kings ,Chennai Kindy Multipurpose Hospital ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...