×

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் நிதி ஆதாரம் இருந்தும் சீரமைக்கப்படாத சாலைகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் போதிய நிதி ஆதாரங்கள் இருந்தும், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

இந்த நகராட்சிக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி, ஜிஎஸ்டி சாலையோரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இதை சுற்றிலும் காவல்துறை உதவி கமிஷனர் அலுவலகம், அம்பேத்கரின் முழு உருவ சிலை, நந்திவரம்-கூடுவாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் அலுவலகம், அங்கன்வாடி மையம் உள்ளது. மேலும், இங்கு தற்போது நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே கோடை காலத்தில் குண்டும் குழியுமாகவும் மழைக் காலத்தில் சேறும் சகதியுமாக மாறி பரிதாபமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியே நாள்தோறும் நந்திவரம் காலனி பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பு மக்கள் கூடுவாஞ்சேரி பேருந்து மற்றும் ரயில் நிலையத்துக்கு நடந்தோ அல்லது இருசக்கர வாகனங்களிலோ சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் நீண்ட காலமாக கருங்கல் ஜல்லி மற்றும் சரளை பெயர்ந்து, சிதறிய நிலையில் கிடக்கின்றன. இதில் பலர் இருசக்கர வாகனங்களில் இருந்தோ, நடந்து செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுவதில் படுகாயம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்கும்படி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும், இந்த நகராட்சியில் பலகோடி ரூபாய் போதிய நிதி ஆதாரங்கள் இருந்தும், இந்த சாலையை சீரமைப்பதில் நகராட்சி அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை.

மேலும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் கார் பார்க்கிங் வசதி இல்லாததால், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் மற்றும் நந்திவரத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் வரையில் ஜிஎஸ்டி சாலையோரத்தில் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. எனவே, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் நேரில் ஆய்வு செய்து, அந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவும், கூடுவாஞ்சேரி பேருந்த நிலைய பகுதிகளில் கார் பார்க்கிங் வசதி செய்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் நிதி ஆதாரம் இருந்தும் சீரமைக்கப்படாத சாலைகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nandivaram ,Kooduvanchery Municipality ,Guduvanchery ,Kuduvanchery ,Kuduvancheri ,
× RELATED கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில்...