×

3 வாரத்திற்கு முன்பே இங்கிலாந்து வந்து பயிற்சி போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும்: ராகுல் டிராவிட் பேட்டி

லண்டன்: இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்சாம்பியன் ஷிப் பைனலில் இந்தியா 209 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணிக்கு கதாயுதத்துடன் ரூ. 13.22 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இந்திய அணிக்கு 6.61 கோடி கிடைத்தது. தோல்விக்கு பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அளித்தபேட்டி: “இவ்வளவு பெரிய டார்கெட்டை சேஸ் செய்வது கடினம் தான்.

ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. இரண்டு வருடங்களாக போராடி தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். பல கடினமான சூழல்களை சந்தித்து இருக்கிறோம்.ஓவல் பிட்ச் 469 ரன்களுக்கானது இல்லை. முதல் நாளே நாங்கள் பெரிய தவறுகளை செய்து விட்டோம். இருப்பினும் 3வது மற்றும் 4வது நாளில் மீண்டும் ஆட்டத்திற்குள் வந்துவிட்டோம். இதற்கு முன்னர் நாங்கள் 300 ரன்களை சேஸ் செய்து இருக்கிறோம். ஆனால் கடைசிநாள் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மைதானங்களில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அணியில் இருக்கின்றனர். இருப்பினும் ஆட்டம் எங்களது பக்கம் அமையவில்லை என்பது ஏமாற்றத்தை கொடுக்கிறது.

பல தொடர்களில் அரை இறுதிப் போட்டி, இறுதிப்போட்டி வரை வந்திருக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட நாளில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதன் காரணமாகத்தான் கோப்பைகளை வெல்ல முடியவில்லை. இருப்பினும் எங்களது அணியில் தலைசிறந்த வீரர்கள் இருக்கின்றனர். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராக இந்திய வீரர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. ஒரு பயிற்சியாளராக நிச்சயம் அதில் மகிழ்ச்சி இல்லை. மூன்று வாரங்களுக்கு முன்பாகவே இங்கிலாந்து வந்து, பயிற்சிப் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். அதேபோல் தோல்விக்கும் அதுதான் காரணம் என்று சொல்லவில்லை” என்றார்.

டெஸ்ட்டில் இருந்து விரைவில் ஓய்வு: கில்லின் சர்ச்சை கேட்ச் குறித்து கேப்டன் ரோகித்சர்மா அளித்த பேட்டி: ஐபிஎல் போன்ற போட்டிகளில் பத்து விதமான கோணங்களில் முடிவுகள் பார்க்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது. ஆனால் இங்கு இரண்டு மூன்று முறை பார்க்கப்பட்டு அதுவும் உறுதியில்லாத சமயத்தில் எப்படி பவுலிங் அணிக்கு சாதகமாக முடிவுகள் கொடுத்திருக்க முடியும். 100% உறுதியாக இல்லாத ஒன்றில் இப்படி அவுட் என்று கொடுத்திருப்பது சற்றும் முறையற்றது. உலகத்தரம் மிக்க போட்டியில் இப்படிப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்படுவது எவ்வளவு பெரிய விளைவை கொடுத்திருக்கிறது. மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. அதுவும் இத்தனை கேமராக்கள் இருந்தும் முடிவுகள் இப்படி கொடுக்கப்பட்டது மிகப்பெரிய வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது.” என்றார். மேலும் இதுதான் கேப்டனாக எனது கடைசி டெஸ்ட் என்றும் விரைவில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் எனவும் ரோகித்சர்மா கூறினார்.

The post 3 வாரத்திற்கு முன்பே இங்கிலாந்து வந்து பயிற்சி போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும்: ராகுல் டிராவிட் பேட்டி appeared first on Dinakaran.

Tags : England ,Rahul Dravid ,London ,India ,Australia ,Test Championship ,London Oval, England ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை