×

பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் மாயமான விவகாரம் 11 வேலைக்காரர்களிடம் நடத்திய விசாரணையில் திடீர் திருப்பம்: பொய் புகார் அளித்து நாடகம் ஆடுகிறாரா என விஜய் ஏசுதாஸ் மனைவி மீது போலீஸ் சந்தேகம்

சென்னை:பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் தங்கம், வைர நகைகள் மாயமான விவகாரத்தில் திடீர் திருப்பமாக வீட்டில் வேலை செய்த 11 வேலைக்காரர்களிடம் நடத்திய விசாரணையில் நகைகள் திருடப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து கணவன்-மனைவி இடையிலான பிரச்னையில் பொய் புகார் அளித்து நாடகம் ஆடுகிறாரா என்ற கோணத்தில் விஜய் ஏசுதாஸ் மனைவி தர்ஷனாவிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை 3வது தெருவை சேர்ந்தவர் விஜய் ஏசுதாஸ். மனைவி தர்ஷனாவுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்ல கடந்த பிப்ரவரி 18ம் தேதி வீட்டில் உள்ள நகைகளை பார்க்கும் போது, அதில் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமாகி இருந்தது. வீட்டிற்கு வெளியாட்கள் யாரும் வராத நிலையில், நகைகள் மட்டும் மாயமாகி உள்ளது.

இதையடுத்து, விஜய் ஏசுதாஸ் மனைவி தர்ஷனா அபிராமபுரம் காவல்நிலையத்தில் கடந்த மார்ச் 30ம் தேதி வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகள் மாயமாகி இருப்பதாக புகார் அளித்தார். அபிராமபுரம் போலீசார், விஜய் ஏசுதாஸ் வீட்டிற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். அப்போது, மாயமான நகைகள் அனைத்தும் தர்ஷனாவுக்கு அவரது பெற்றோர் திருமணத்தின் போது போட்ட நகைகள் என்று தெரியவந்துள்ளது. அதேநேரம் நகைகள் வைக்கப்பட்ட லாக்கர் ‘ரகசிய குறியீடு’ பயன்படுத்தும் லாக்கர். ரகசிய குறியீடு மற்றும் ரகசிய எண்கள் இருந்தால் மட்டுமே லாக்கரை திறக்க முடியும். ரகசிய குறியீடுகள் பாடகர் விஜய் ஏசுதாஸ் மற்றும் அவரது மனைவி தர்ஷனாவுக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்கும் அந்த ரகசிய குறியீடு தெரியாது என்று விசாரணையில் தெரியவந்தது.

இதனால் வீட்டில் உள்ள நகைகள் மாயமானது குறித்து துபாயில் உள்ள பாடகர் விஜய் ஏசுதாசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் ஏசுதாஸ் இன்று வரை துபாயில் இருந்து சென்னைக்கு வரவில்லை. மாயமான நகைகள் குறித்து போலீசார் பல முறை அவரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டும் அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் வேலை செய்த 11 வேலைக்காரர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதில் விஜய் ஏசுதாஸ் வீட்டில் உள்ள லாக்கரில் இருந்து நகைகள் திருடப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. லாக்கர் ரகசிய எண்கள் விஜய் ஏசுதாஸ் மற்றும் அவரது மனைவி தர்ஷனாவுக்கு மட்டுமே தெரியும். இதனால் வெளியாட்கள் யாரும் நகைகளை திருட வாய்ப்பு இல்லை என்று இதுவரை நடத்திய விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் போலீசாருக்கு புகார் அளித்த விஜய் ஏசுதாஸ் மனைவி தர்ஷனா மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவரது வீட்டில் கடந்த பிப்ரவரி 18ம் தேதியே நகைகள் மாயமானதாக தெரியவந்ததாகவும், ஆனால் அப்போது புகார் அளிக்காமல், 40 நாட்கள் கழித்து கடந்த மார்ச் 30ம் தேதி புகார் அளிக்க என்ன காரணம், கணவன்-மனைவி இடையேயான பிரச்னையில் நகைகள் மாயமானதாக தர்ஷனா நாடகம் ஆடுகிறாரா என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.இதனால் லாக்கரில் இருந்து மாயமான 60 சவரன் நகைகள் குறித்து விஜய் ஏசுதாஸ் மனைவி தர்ஷனாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணை முடிந்தபிறகுதான் நகைகள் மாயமானது உண்மையா அல்லது நாடகமா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் மாயமான விவகாரம் 11 வேலைக்காரர்களிடம் நடத்திய விசாரணையில் திடீர் திருப்பம்: பொய் புகார் அளித்து நாடகம் ஆடுகிறாரா என விஜய் ஏசுதாஸ் மனைவி மீது போலீஸ் சந்தேகம் appeared first on Dinakaran.

Tags : Singer ,Vijay ,Vijay Esudas ,Chennai ,Vijay Esudas' ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...