×

அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் பல கோடி பணம் பறித்த விவகாரம்; ஏ.ஆர்.டி. குழுமத்தின் மோசடி சகோதரர்களின் ரூ.78 லட்சம் முடக்கம்: 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு முடிவு

சென்னை:அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்த வழக்கில் ஏ.ஆர்.டி. குழும உரிமையாளர்களின் வங்கி கணக்கில் உள்ள ரூ.78 லட்சம் பணத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். மேலும், மோசடி சகோதரர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை முகப்பேரில் தலைமையிடமாக கொண்டு ஏ.ஆர்.டி குழுமம் இயங்கி வந்தது. இந்த குழுமம் சார்பில் ஜூவல்லரி, சூப்பர்மார்க்கெட், எலக்ட்ரானிக் கடை, சலூன், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இயங்கி வந்தது.

இதன் மூலம் தங்களது ஏ.ஆர்.டி.குழுமத்தில் பொதுமக்கள் முதலீடு செய்யும் ரூ.1 லட்சத்திற்கு வாரம் 3 ஆயிரம் மற்றும் மாதம் ரூ.12 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என்று விளம்பரம் செய்தனர். அதை நம்பி பொதுமக்கள் பலர் இந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். ஆனால் சொன்னபடி இந்த நிறுவனம் பொதுமக்களுக்கு முதலீடு செய்த பணத்திற்கு வட்டி கொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் பொதுமக்களின் முதலீட்டு பணத்துடன் ஏ.ஆர்.டி. குழுமத்தின் உரிமையாளர்களான ஆல்வின் ஞானதுரை மற்றும் அவரது சகோதரர் ராபின் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து அந்த நிறுவனத்தில் முதலீடு ெசய்து ஏமாந்த பொதுமக்கள் சென்னை அசோக்நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏ.ஆர்.டி.குழுமத்தின் உரிமையாளர்களான ஆல்வின் ஞானதுரை, அவரது சகோதரர் ராபின், மேலாளர்கள் பிரியா, சமீர், ஜவகர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ஏ.ஆர்.டி. குழுமத்திற்கு சொந்தமான ஜூவல்லரி, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி, வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
அதைதொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வந்த ஏ.ஆர்.டி.குழுமத்தின் உரிமையாளர்களான ஆல்வின் ஞானதுரை மற்றும் அவரது சகோதரரான ராபினை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் டெல்லியில் கைது செய்தனர்.

பின்னர் ஏ.ஆர்.டி குழுமத்தின் உரிமையாளர்களான ஆல்வின் ஞானதுரை மற்றும் ராபின் ஆகியோர் 1,760 பேரிடம் ரூ.23 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்து இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து உரிமையாளர்களான சகோதரர்களின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.78 லட்சத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். மேலும், இந்த மோசடி தொடர்பாக உரிமையாளர்கள் இருவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளில் தற்போது போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

The post அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் பல கோடி பணம் பறித்த விவகாரம்; ஏ.ஆர்.டி. குழுமத்தின் மோசடி சகோதரர்களின் ரூ.78 லட்சம் முடக்கம்: 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு முடிவு appeared first on Dinakaran.

Tags : A.R.D. ,Economic Offenses Division ,CHENNAI ,Dinakaran ,
× RELATED அடமான நகைகளுக்கு வட்டியில்லை என கூறி...