×

அடையாறு ஆற்றங்கரையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை தலைமை செயலாளர் ஆய்வு

சோழிங்கநல்லூர், ஜூன் 12: அடையாறு ஆற்றங்கரையோரம் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்றுகள் நடும் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை கோட்டூர்புரம் காந்திநகரில் அடையாறு ஆற்றங்கரையோரம் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்றுகள் நடும் பணிகளை தலைமைச்செயலர் இறையன்பு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், காந்தி நகர் பூங்காவில் ₹9.41 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைத்தல், சேதமடைந்த சுற்றுச்சுவரை புனரமைத்தல், செடிகளுடன் கூடிய நடைபாதை அமைத்தல், குடிநீர் வசதி மற்றும் மின்வசதி, பசுமையுடன் புல்வெளிகள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், அறிவிப்பு பலகைகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், வேலி அமைத்தல் போன்ற பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்து, பூங்காவில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி நல்ல முறையில் உள்ளதா பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து பூங்காவில் உள்ள நடைபாதைகளை நல்ல முறையில் பராமரிக்கவும், கூடுதலாக கழிப்பறைகள் கட்டவும், உடற்பயிற்சிக் கூடம் அமைக்கவும், புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, கோட்டூர்புரம் ெகனால் பேங்க் சாலையில் உள்ள பாட்ரிசியன் கல்லூரி அருகில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் ₹1.99 கோடி மதிப்பீட்டில் 4.99 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் அடர் வனத்துடன் கூடிய கால்பந்து விளையாட்டு மைதானத்தில் 1,402 மரக்கன்றுகள் நடும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதேபோல, அடையாறு ஆற்றங்கரையோரங்களில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் ₹5.40 கோடியில் திரு.வி.க பாலம் முதல் எம்.ஆர்.டி.எஸ். பாலம் வரை 2.4 கி.மீ. நீளத்திற்கு நடப்பட்டுள்ள 35,785 மரக்கன்றுகள் மற்றும் எம்.ஆர்.டி.எஸ். முதல் கோட்டூர்புரம் பாலம் வரை ₹5.80 கோடி மதிப்பீட்டில் 2.2 கி.மீ. நீளத்திற்கு நடப்பட்டுள்ள 23,039 மரக்கன்றுகள் ஆகியவற்றை தலைமைச்செயலர் இறையன்பு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களிடம் கலந்துரையாடி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா திறக்கும் நேரம் குறித்து அறிவிப்பு பலகைகள் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் கூவம் மற்றும் அடையாறு ஆற்றங்கரையோரங்களில் கடல் பாதாம், பூவரசு, புங்கன், கடல் பூவரசு, கல்யாண முருங்கை, உதயம், மருத மரம், கடல் திராட்சை, மந்தாரை, புன்னை, முள்ளில்லா மூங்கில், தாழை, நாவல், வேம்பு, அரசமரம், ஆலமரம், மகிழம், துளசி, வெட்டிவேர், அலையாத்தி உள்ளிட்ட 48 வகையான மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதுநாள் வரை கூவம் மற்றும் அடையாறு ஆற்றங்கரையோரங்களில் 1,22,460 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார்.இந்த ஆய்வுகளின்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், இணை ஆணையாளர் சமீரன், துணை ஆணையாளர்கள் ஷரண்யா, அமித், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு
கோட்டூர்புரம் சித்ரா நகரில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளின் கட்டிடக் கழிவுகளை உடனடியாக அகற்றவும், ஆற்றங்கரைகளின் ஓரங்களை சமப்படுத்தி, பலப்படுத்திடவும் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார்.

The post அடையாறு ஆற்றங்கரையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை தலைமை செயலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Adyar River ,Chozhinganallur ,Chennai Rivers Restoration Trust ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...