×

ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா இன்று துவக்கம்

கீழக்கரை, ஜூன் 12: ஏர்வாடி தர்ஹா 849ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா இன்று மாலை ஊர்வலத்துடன் துவங்குகிறது. கீழக்கரை அருகே ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் சந்தனக்கூடு சமூக நல்லிணக்க திருவிழா மே 21ல் மவ்லீது ஷரீப் உடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா இன்று (ஜூன் 12) மாலை 4.30 மணிக்கு யானை, குதிரைகளுடன் ஊர்வலமாக தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் விழா நடைபெறுகிறது.

நாளை அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜாவீர் நல்ல இபுராஹீம் தர்ஹாவில் இருந்து சந்தனக்கூடு எடுத்து, அலங்கார ரதத்துடன் ஊர்வலம் புறப்பட்டு, அதிகாலை 5 மணியளவில் தர்ஹா வந்தடையும். தர்ஹாவை சந்தனக்கூடு 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனை, மக்பராவில் சந்தனம் பூசப்படும். சந்தனக்கூடு திருவிழாவை காண தென் இந்தியா, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் வருகையால் தர்ஹா பகுதி முழுவதும் களை கட்டியுள்ளது. தர்ஹா மின்னொளி அலங்காலத்தில் ஜொலிக்கிறது.

மதுரை,கோவை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏர்வாடி தர்ஹாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தர்ஹா வளாகத்தில் சிறப்பு மருத்துவக்குழுவினர் முகாமிட்டு உள்ளனர். தர்ஹா வளாகத்தில் கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு பக்தர்களின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை(ஜூன் 13) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி. தங்கதுரை உத்தரவில் டிஎஸ்பி.க்கள் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Sandalwood festival ,Airwadi ,Geezalkarai ,Airwadi Darha 849th ,Sandalwood ,
× RELATED சந்தனக்கூடு திருவிழாவில் அடி மரம் ஏற்றம்