×

வறண்ட ராமநாதபுரம் கிராமங்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட 440 ஆர்.ஓ பிளான்ட்டுகளில் ₹40 கோடி ஊழல்?.. அதிமுக ஆட்சியில் மாஜி அமைச்சருக்கு வேண்டிய சென்னை நிறுவனம் கையாடல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையுடன் இருக்கிறது. எங்கு கிணறு தோண்டினாலும், போர்வெல் அமைத்தாலும் உவர்ப்பு தண்ணீர் தான் கிடைக்கும். இதனால் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உள்ளூர் நீர் ஆதாரங்கள் கைகொடுப்பதில்லை. இதனால் மாவட்டத்தில் பின்தங்கிய வறண்ட பகுதியான முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்காக நரிப்பையூரில் 1998-99ம் ஆண்டில் ₹40 கோடி மதிப்பில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை அப்போதைய முதல்வர் கலைஞர் துவங்கி வைத்தார்.

நாள் ஒன்றிற்கு 38 எம்.எல்.டி நல்ல தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இதனால் சுமார் 296 கிராமங்களில் தடையின்றி தண்ணீர் கிடைத்து வந்தது. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் முடக்கப்பட்டது. இதனால் மீண்டும் குடிதண்ணீர் பிரச்னை எழுந்தது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், 2009-2010 ஆண்டில் ₹616 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது நாள் ஒன்றிற்கு 100 எம்.எல்.டி தண்ணீர் வழங்கப்பட்டதால் ராமநாதபுரம் மட்டுமின்றி சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 16 லட்சம் மக்கள் பயன்பெற்று வந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,300 கிராமங்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் முறையான பராமரிப்பின்மை காரணமாக 100 எம்.எல்.டியிலிருந்து குறைந்து 75 எம்.எல்.டிக்கு கீழான அளவில் தண்ணீர் வந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. இதனால் கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் சாலையோரம் செல்லும் பிரதான காவிரி குழாய்களில் கசியும் தண்ணீரை பிடிப்பதற்காக தள்ளுவண்டியில் காலிக்குடங்களுடன் காத்து கிடந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் மூலமாக அரசின் கவனத்திற்கு சென்றது. இதனை அப்போதைய அத்துறையை சேர்ந்த மணியான அமைச்சர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். அவருக்கு வேண்டிய சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, போகலூர், நயினார்கோவில், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய 11 யூனியன்களில் சுமார் 440 ஆர்.ஓ பிளான்ட்கள் சுமார் ₹40 கோடி செலவில் அமைக்கப்பட்டது.

2 ஆயிரம் லிட்டர் ஆர்.ஓ பிளான்ட் அமைக்க ₹14.97 லட்சம், ஆயிரம் லிட்டர் ஆர்.ஓ பிளான்ட் அமைக்க ₹7.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. 100 அடிக்கு மேல் போர்வெல் அமைக்க அனுமதி இருந்தும், 60 அடிக்கு மேல் போர் போடவில்லை. இதனால் போதிய ஊற்று இன்றி போர்வெல்கள் வறண்டன. மின் இணைப்பு பெறாமல் கிடப்பில் போடுவது, இடப்பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல இடங்களில் இத்திட்டம் முழுமை பெறவில்லை. பிளான்ட்டிற்கு ஷெட் அமைப்பதற்குள், பிளான்ட் இயந்திரங்களை மட்டும் இறக்கி வைத்து விட்டு சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பணி முடிந்துவிட்டது எனக்கூறி பணம் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

திறக்கப்பட்ட பிளான்ட்களில் பராமரிப்பு செலவு எனக் கூறி, ஒரு குடத்துக்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால் தண்ணீர் குடிக்கும் அளவிற்கு சுவையாக இல்லை என்பதால் புழக்கத்திற்கு வந்தும் கூட மக்கள் இங்கு தண்ணீர் பிடிப்பது இல்லை. பயன்படுத்தப்பட்ட பிளான்ட்களில் பழுதாகும் பில்டர்களை (சுத்திகரிப்பு) வாரண்டி இருந்தும் மாற்றி கொடுப்பது இல்லை. மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட பெரும்பான்மையான பிளான்ட்கள் முறையாக இயங்காததால் இயந்திரங்கள் பழுதான நிலையில் பயன்பாடின்றி, பாழடைந்த நிலையில் அப்படியே பூட்டியே கிடக்கிறது. சில இடங்களில் பிளான்ட்டுகள் திறக்கப்படக்கூட இல்லை. ஒட்டுமொத்தமாக 90% பிளான்ட்கள் செயல்படாமல் உள்ளது.

முறையான திட்டமிடல் இன்றி துவங்கப்பட்ட இத்திட்டம் இன்று மாவட்டம் முழுவதும் முடங்கி கிடக்கிறது. இந்தத் திட்டத்தில் ₹40 கோடி வரையில் மெகா ஊழல் நடந்துள்ளது என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து விசாரிக்க தற்போதைய தமிழ்நாடு அரசு விசாரணை கமிஷன் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

* மண்டபம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, போகலூர், நயினார்கோவில், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய 11 யூனியன்களில் சுமார் 440 ஆர்.ஓ பிளான்ட்கள் சுமார் ₹40 கோடி செலவில் அமைக்கப்பட்டது.
* 2 ஆயிரம் லிட்டர் ஆர்.ஓ பிளான்ட் அமைக்க ₹14.97 லட்சம், ஆயிரம் லிட்டர் ஆர்.ஓ பிளான்ட் அமைக்க ₹7.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

பராமரிப்பு கம்பெனியை தொடர்பு கொள்ள முடியவில்லை
முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் அரண்மனைச்சாமி கூறுகையில்:
கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, தேவையான கிராமங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆர்.ஓ பிளான்ட் தரப்பட்டது. குறிப்பிட்ட அளவு தண்ணீர் உற்பத்திக்கு பிறகு பில்டர்களை மாற்றவேண்டும். வாரண்டி இருந்தும் ஒப்பந்த கம்பெனி மாற்றி தரவில்லை. உதிரி பாக பொருட்களும் இப்பகுதியில் கிடைப்பதில்லை. பராமரித்து தர வேண்டிய கம்பெனியை தொடர்பு கொள்ளவே முடியாது. இதுபோன்ற காரணங்களால் பிளான்ட்டுகள் பல இடங்களில் பயன்பாடின்றி கிடக்கிறது என்கிறார்.

The post வறண்ட ராமநாதபுரம் கிராமங்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட 440 ஆர்.ஓ பிளான்ட்டுகளில் ₹40 கோடி ஊழல்?.. அதிமுக ஆட்சியில் மாஜி அமைச்சருக்கு வேண்டிய சென்னை நிறுவனம் கையாடல் appeared first on Dinakaran.

Tags : RO ,Ramanathapuram ,Ramanathapuram district ,Chennai ,ADMK ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...