×

₹5 லட்சம் வென்றது ‘மஞ்சப்பை பரோட்டா’

மதுரை: தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. மீறினால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம், தொடர்ந்து அதே தவறை செய்தால் ₹3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் ‘மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை’ அரசு அறிமுகம் செய்தது. தமிழக முதல்வரின் மஞ்சப்பை திட்டத்தால் ஈர்க்கப்பட்ட தன்னார்வலர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மீண்டும் மஞ்சப்பை என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி சர்ட், தொப்பி மற்றும் துணிப்பைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள உணவக உரிமையாளரான நவநீதன் என்பவர் மஞ்சப்பை பரோட்டாவை அறிமுகம் செய்திருக்கிறார். கோதுமை மாவைக் கொண்டு மஞ்சப்பை வடிவத்தில் கைப்பிடியுடன் கூடிய பரோட்டா தயாரித்து விற்பனை செய்கிறார். இந்த பரோட்டாவில் தக்காளி சாஸ் மூலம் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற வாசகம் எழுதப்பட்டு 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

புதிய வடிவில் விற்கப்படும் இந்த பரோட்டாவுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த உணவகத்தில் பார்சல் வாங்க வருபவர்களுக்கு பரோட்டாவுடன் இலவசமாக மஞ்சப்பை வழங்கப்படுகிறது. மஞ்சப்பை இப்படி திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓட்டல் உரிமையாளர் நவநீதனுக்கு, தமிழக அரசின் மஞ்சப்பை விருதும், ₹5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post ₹5 லட்சம் வென்றது ‘மஞ்சப்பை பரோட்டா’ appeared first on Dinakaran.

Tags : Manjapai Parotta ,Madurai ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...