×

மயிலாடுதுறையில் பட்டின பிரவேச நிகழ்ச்சி: தருமபுரம் ஆதீனத்தை ேதாளில் சுமந்து சென்ற பக்தர்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் குரு பூஜையை முன்னிட்டு பட்டின பிரவேச நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை பக்தர்கள், பல்லக்கில் அமர வைத்து மடத்தை சுற்றி 4 வீதிகளிலும் தோளில் தூக்கி வீதியுலா வந்தனர். முன்னதாக தருமபுரம் ஆதீனம், திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மேள, தாள வாத்தியங்கள் முழங்க, ஆதீன தம்பிரான்கள் புடை சூழ பல்லக்கில் எழுந்தருளினார். நிகழ்ச்சியில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புளியாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சாமிகள், தொண்டை மண்டல ஆதீனம், செங்கோல் ஆதீனம் மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்வதை தடை செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்பினர் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், தமிழ் மண் தண்ணுரிமை இயக்க அமைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வக்கீல் வேலு குணவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். பட்டினப்பிரவேச விழா இன்று அதிகாலை 3 மணி வரை நடந்தது.

The post மயிலாடுதுறையில் பட்டின பிரவேச நிகழ்ச்சி: தருமபுரம் ஆதீனத்தை ேதாளில் சுமந்து சென்ற பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Dharumapuram ,Darumapura ,Dharumapuram Atheenam ,
× RELATED தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்...