×

மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபோர்ஜாய்’ புயல், அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறவுள்ளது: வானிலை ஆய்வு மையம்!

சென்னை: மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபோர்ஜாய்’ புயல், அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து, வரும் 15ம் தேதி பாகிஸ்தான், கட்ச் கடற்கரை பகுதிகளை அடையும் என்று தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த ஜூன் 6ம் தேதி அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே இடத்தில் மையம் கொண்டிருந்தது. பின்னர் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் வழங்கியுள்ள ‘பிபோர்ஜாய்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும் என கூறப்பட்டுள்ளது.

இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயல் காரணமாக கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்த நிலையில், பிபோர்ஜாய் புயல் அடுத்தடுத்து மேலும் தீவிரமடைந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பிபோர்ஜாய் புயல் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், மேலும் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த புயல் மும்பைக்கு சுமார் 600 கிலோமீட்டர் மேற்கிலும், கராச்சிக்கு தெற்கே 830 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது. இது மிகக் கடுமையான சூறாவளி புயலாக “பிபோர்ஜாய்” வலுப்பெற்று கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து ஜூன் 15 ம் தேதி பிற்பகலில் பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டிய சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

The post மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபோர்ஜாய்’ புயல், அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறவுள்ளது: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.

Tags : Storm Biborzai ,Middle East Arabic Sea ,Meteorological ,Research Centre ,Chennai ,Cyclone Biborjai ,Biborzai Storm ,Middle East Arab Sea ,Centre ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் ஜூன் 1ல் கனமழை பெய்ய...