×

வீரணம்பட்டி சம்பவம் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர் 25 பேர் கைது

 

கரூர், ஜூன் 11: வீரணம்பட்டி சம்பவத்தை கண்டித்து கரூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள வீரணம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் கோயிலுக்குள் வழிபட சென்றபோது அவரை ஒரு பிரிவினர் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்தும், தடுத்து நிறுத்தியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், கோயிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஜெயராமன் தலைமை வகித்தார். செய்தித் தொடர்பாளர் இளங்கோ, பொருளாளர் சதீஷ்குமார், கரூர் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் செல்வப்பெருந்தகை, தொண்டரணிச் செயலாளர் ராஜா, தாந்தோணி நகரச் செயலாளர் சக்திவேல், கரூர் நகர செயலாளர் முரளி, மாணவரணி அமைப்பாளர் தீபக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வீரணம்பட்டி பிரச்னையில் வழிபட தடுத்தவர்கள் மீது உடனடியாக வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் திடீரென திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை கைது செய்தனர்.

The post வீரணம்பட்டி சம்பவம் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர் 25 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vishikava ,Veeranampatti incident ,Karur ,Liberation Tigers ,Tamil Nadu ,Veeranapatti ,
× RELATED கரூர் புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை தேவை