×

கலைஞர் சிலை, ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் நாளை திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் பயணம்: திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்

சென்னை: சேலத்தில் கலைஞர் கருணாநிதி சிலை, ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் திறப்பு மற்றும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் செல்கிறார். இன்று மாலை 5 ரோட்டில் நடக்கும் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று பேசுகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் முகாமிட்டு பல்வேறு அரசு நிகழ்ச்சி களில் பங்கேற்கிறார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து சேலத்திற்கு தனி விமானத்தில் செல்கிறார். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கும் அவருக்கு, சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ, டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி, நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர் மற்றும் அதிகாரிகள் முதல்வரை வரவேற்கின்றனர். அதிகாரிகள், கட்சியினரின் வரவேற்பை பெறும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாலை 6 மணிக்கு சேலம் 5 ரோடு ஸ்ரீரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடக்கும் சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். திமுக பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடக்கும் இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பின்னர், சேலம் அஸ்தம்பட்டி சுற்றுலா பயணியர் மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை (11ம் தேதி) காலை 9.30 மணிக்கு சேலம் மாநகராட்சி அண்ணாபூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து காலை 10 மணிக்கு சேலம் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு மாநகர பேருந்து நிலையத்தையும், நேரு கலையரங்கம், பெரியார் பேரங்காடி, வஉசி மார்க்கெட் உள்ளிட்டவற்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர், காலை 11 மணிக்கு சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் துறை சார்ந்த ₹2000 கோடியிலான திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார். மேலும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அப்போது 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசுகிறார்.

இந்த அரசு விழா முடிந்ததும், மாலையில் மேட்டூருக்கு சென்று இரவு ஓய்வு எடுக்கிறார். அடுத்தநாள் (12ம் தேதி) காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விடுகிறார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு பங்கேற்கின்றனர். சேலத்தில் 3 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முகாமிட்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

The post கலைஞர் சிலை, ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் நாளை திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் பயணம்: திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : CM B.C. ,G.K. Stalin ,Salem ,Kazhagam Activists ,Chennai ,Karunanidhi ,Mattur dam ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...