வத்திராயிருப்பு: அக்னிநட்சத்திரம் முடிந்தும் கோடை வெயில் கொளுத்துவதால் வத்திராயிருப்பில் 38க்கும் மேற்பட்ட கண்மாய்கள் வறண்டுவிட்டன. இதனால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வத்திராயிருப்பு பகுதியில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் கொளுத்தி வருவதால் பெரியகுளம் கண்மாய், விராகசமுத்திரம் உள்ளிட்ட 38க்கும் மேற்பட்ட கண்மாய்கள் வறண்டுவிட்டன. இவை பாசன வசதிகள் அதிகம் கொண்ட கண்மாய்களாகும். இதில் பெரியகுளம் கண்மாய் 907 ஏக்கர் பாசன வசதி கொண்டது. விராக சமுத்திரம் கண்மாய் 430 ஏக்கர் பாசன வசதி கொண்டதாகும். தற்போதைய நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் வத்திராயிருப்பு பகுதியில் மட்டும் மழை எதுவும் பெய்யாமல் கருமேகங்கள் சூழ்வதும் இடி மின்னல் மட்டும் வந்து செல்வதுமாக உள்ளது.
இதனால் கண்மாய்கள் முற்றிலும் வறண்டுவிடும் நிலையில் உள்ளன. இந்த கண்மாய்களை நம்பி நெல் விவசாயம் அதிக அளவு உள்ளது. எனவே இங்கு மழை பெய்தால் விவசாயப்பணிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பிளவக்கல் பெரியாறு அணையின் மொத்த உயரம் 47.56 அடி. அணையில் தற்போதுள்ள நீர்மட்டம் 32 அடி. அணைக்கு நீர்வரத்து இல்லை. கோவிலாறு அணையின் மொத்த உயரம் 42.64 அடி. தற்போதுள்ள நீர்மட்டம் 12 அடி. அணைகளில் கோவிலாறு அணையில் மட்டும் நீர்மட்டம் மிகமிக குறைந்த அளவே உள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாமல் தொய்வு ஏற்பட்டால் தென்னை, வாழை உள்ளிட்ட பல்வேறு மரங்களை வைத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். காரணம் இவர்கள் பெரும்பாலும் கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் பார்க்கின்றனர்.
மழை தொடர்ந்து பெய்யாவிட்டால், நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று, கிணற்றில் நீர் கிடைக்காது. எனவே மழையை நம்பி விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கூறுகையில், ‘‘பொதுவாக வத்திராயிருப்பு பகுதியில் கண்மாய் பாசனங்களை நம்பி அதிகளவில் விவசாயிகள் உள்ளனர். கண்மாய்கள் வறண்ட நிலையில் விவசாயக்கிணறுகளில் இருக்கின்ற தண்ணீரை வைத்து தென்னை போன்ற விவசாயங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வத்திராயிருப்பு அருகே உள்ள கிருஷ்ணன்கோவிலில் பெய்கின்ற மழை கூட இந்த பகுதிகளில் பெய்யவில்லை. அதோடு கண்மாய்கள் தண்ணீரின்றி வறண்ட நிலையில் கிடப்பதால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்’’ என்றனர்.
The post அக்னி முடிந்தும் வெயில் கொளுத்துவதால் வத்திராயிருப்பில் 38 கண்மாய்கள் நீரின்றி வறண்டன: விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.