×

ஒடிசா ரயில் விபத்தில் பலியான உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி கட்டிடம் இடிப்பு: ஒடிசா அரசு உத்தரவு

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பஹனாகா பள்ளிக் கட்டிடத்தை இடிக்க ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பஹனாகா பஜார் அருகே கடந்த 2ம் தேதி இரவு 3 ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 288 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பஹனாகா அரசு உயர்நிலை பள்ளியின் 3 அறைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு அறையில் உடற்கூராய்வும் செய்யப்பட்டது. 2 நாட்களுக்கு பிறகு சில உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சில மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டன.

தற்போது கோடை விடுமுறை முடிந்து வரும் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சடலங்கள் வைக்கப்பட்டிருந்த பஹனாகா பள்ளிக்கு செல்ல குழந்தைகள் அச்சம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்களும் அந்த பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப தயக்கம் காட்டினர். ஏற்கனவே 65 ஆண்டுகள் பழமையான பள்ளிக் கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டுமென மாவட்ட கல்வி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உடல்கள் வைக்கப்பட்டிருந்த பஹனாகா அரசு உயர்நிலை பள்ளிக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பள்ளி நிர்வாகக்குழு முடிவெடுத்து அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதைஏற்று அந்த பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார். அதன்படி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகக் குழுவினர் முன்னிலையில் பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. பெரிய நூலகம், நவீன அறிவியல் ஆய்வகம், டிஜிட்டல் வகுப்பறைகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய மாதிரி பள்ளியாக பஹனானா அரசு உயர்நிலை பள்ளி மாற்றப்பட உள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்தில் பலியான உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி கட்டிடம் இடிப்பு: ஒடிசா அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Odisha ,Odisha Govt. Bhubaneswar ,Odisha government ,Bahanaga ,school ,Odisha's… ,Dinakaran ,
× RELATED ஒடிசா சிறப்பு திட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன் ராஜினாமா