×

அடையாறு, கூவம் ஆறு உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க 150 இடங்களில் சிசிடிவி கேமரா: மாநகராட்சி ஆணையர் தகவல்

தாம்பரம், ஜூன் 10: சென்னையில் அடையாறு, கூவம் ஆறு உள்ளிட்ட முக்கிய நீர் வழித்தடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க 150 இடங்களில் சிசிடிவி கேமரா அமைக்கப்படும், என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர பகுதியில் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளன. மழைக்காலங்களில் தண்ணீரை வடியச் செய்வதில் இந்த நீர்வழித் தடங்களின் பங்கு அதிகம். இந்நிலையில், இந்த நீர் வழித்தடங்களில் ஆங்காங்கே பல இடங்களில் விதிமீறி குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. சில இடங்களில் சட்ட விரோதமாக கழிவுநீர் விடப்படுகிறது.

நீர்வழித்தட கரையோரங்களில் குப்பை கழிவுகள் பெருமளவில் கொட்டப்படுவதால் ஆறுகளின் அகலமும் குறைந்து காணப்பட்டது. இதனால், இந்த நீர் வழித்தடங்களை பாதுகாக்க சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கூவம், அடையாறு இவற்றின் கரையோர பகுதிகளை ஆக்கிரமித்திருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அகற்றப்பட்டு, அங்கு வசித்தவர்களுக்கு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, ஆறுகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் கொட்டப்பட்ட குப்பை, கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து குப்பை கொட்டாத வகையில் சுவர்கள் எழுப்பப்பட்டு, கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன. மேலும், பல இடங்களில் அடையாறு ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பசுமை திட்டுக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், கூவம் ஆற்றின் கரையோரம் புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை போன்ற பகுதிகளில் சிலர் அத்துமீறி குப்பை மற்றும் கழிவுகளைக் கொட்டி வருகின்றனர்.

இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், நீர் வழித்தடங்களில் குப்பை மற்றும் கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணைர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி கூவம், அடையாறு கரையோரங்களில் குப்பை கொட்டப்படுவது தொடர்பாக ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘நீர்வழித் தடங்களைத் தூய்மையாகப் பராமரித்து, அப்பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனாலும், ஆற்றங்கரையில் சிலர் குப்பை கொட்டி, நீர்நிலையையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தி வருகின்றனர். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவோரை கண்டறிய, 150க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவத் திட்டமிட்டுள்ளோம். மேலும் தேவையான இடங்களில் கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்களை நிறுவவும் முடிவு செய்துள்ளோம். விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்,’’ என்றார்.

விதிமீறினால் வழக்கு
கழிவுநீர் டேங்கர் லாரிகளை கையாளுபவர்கள் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களிலிருந்து சேகரிக்கும் கழிவுநீரை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் வெளியேற்ற வேண்டும் என்றும், சட்ட விரோதமாக நீர் நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பராமரிப்பு பணிகள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழைக் காலத்துக்கு முன்னதாகவே பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இந்த நீர்வழிக் கால்வாய்களில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள், வண்டல்கள் மற்றும் குப்பைகள் ஆகியவை நவீன இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு, தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

The post அடையாறு, கூவம் ஆறு உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க 150 இடங்களில் சிசிடிவி கேமரா: மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Adyar, Coovam river ,Tambaram ,Adyar ,Coovam Aru ,Chennai ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...