×

பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு சென்றபோது ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது: பேசின்பிரிட்ஜ் பகுதியில் பரபரப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்ற ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு நிலவியது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாக பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம்தேதி இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் என 3 ரயில்கள் மோதிய விபத்தில் 278 பேர் பலியாகினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நடந்த சில தினங்களில், அதாவது கடந்த 5ம் தேதி காலை ஒடிசாவின் துங்குரியில் இருந்து பார்கருக்கு சுண்ணாம்பு கற்களை ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் சில பெட்டிகள், சம்பர்தாரா அருகே திடீரென தடம் புரண்டது. உயிர்சேதம் ஏற்படவில்லை. மற்றொரு சம்பவமாக கடந்த 7ம்தேதி ஒடிசாவில் ஜஜ்பூர் ரோடு ரயில் நிலைய பணிமனை அருகே சில தொழிலாளர்கள் ரயில்வே பணிகளை மேற்கொண்டிருந்தபோது மழை பெய்ததால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் கீழே ஒதுங்கினர். அந்த நேரத்தில் சரக்கு ரயில் நகர தொடங்கியபோது, ரயிலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த தொடர் சம்பவங்களால் ரயில் பயணிகள் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் பயணிகளை இறக்கிவிட்டு, யார்டுக்கு புறப்பட்ட ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிய விவரம்:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்கியதும், ரயிலை சுத்தம் செய்வதற்காக பேசின் பிரிட்ஜ் ரயில்நிலைய பணிமனைக்கு சென்றபோது, ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதைபார்த்த ஊழியர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் திலீப் குமார், உதவி ஆய்வாளர் குணசேகர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதனால் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதற்கு எந்த பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. அதைத்தொடர்ந்து டிராக்கில் இருந்து வெளியே வந்த ஒரு பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் தூக்கி வைத்தனர். பின்னர் யார்டுக்கு ரயில் புறப்பட்டு சென்றது. நள்ளிரவு நேரத்தில் சம்பவம் நடந்ததாலும், இந்த வழிதடத்தில் மற்ற ரயில்கள் செல்லாததாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி தடம் புரண்ட சம்பவம் பேசின்பிரிட்ஜ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப நாட்களாக ரயில் விபத்துக்கள் நடந்து வருவது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு சென்றபோது ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது: பேசின்பிரிட்ஜ் பகுதியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Basinbridge ,Chennai ,Chennai Central Railway Station ,Basin Bridge ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!