×

மோசடி வழக்கில் முடக்கப்பட்ட சொத்தை விற்க ஐஏஎஸ் அல்லது ஓய்வு நீதிபதியை சிறப்பு அலுவலராக நியமிக்கலாம்: ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

மதுரை: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட தனியார் நிதி நிறுவனமான குளோபல் கேபிடல் டிரேடிங் சர்வீசஸ், வாடிக்கையாளர்களிடம் பல கோடிக்கு முதலீடு வசூலித்து ஏமாற்றிய வழக்கில் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கி, ஏலம் விட்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ‘இந்த நடவடிக்கை சரியே’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அரசாணை வெளியிட்டு 1,537 நாட்கள் தாமதமாக மதுரை பொருளாதார முதலீட்டு குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில்(டான்பிட்) மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து நிறுவனத்தின் பங்குதாரரான ராம்தாஸ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் சீராய்வு மனு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: இதுவரை பொருளாதார முதலீட்டு குற்றங்களுக்காக 9 லட்சத்து 90 ஆயிரத்து 166 டெபாசிட்தாரர்கள் புகாரில் 1,249 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சொத்து முடக்கத்திற்காக 366 அரசாணைகள் வெளியாகியுள்ளது. இதில், ரூ.827 கோடியே 67 லட்சத்து 75 ஆயிரத்து 644 மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் ரூ.321 கோடியே 45 லட்சத்து 37 ஆயிரத்து 93 அளவுக்கு சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ரூ.50 கோடியே 71 லட்சத்து 61 ஆயிரத்து 303 டான்பிட் நீதிமன்றத்திலும், டிஆர்ஓ கணக்கில் ரூ.372 கோடியே 16 லட்சத்து 98 ஆயிரத்து 396 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 60,824 டெபாசிட்தாரர்களுக்கு ரூ.264 கோடியே 73 லட்சத்து 34 ஆயிரத்து 273 திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 முதல் ஆகஸ்ட் 2017 வரை மட்டும் ரூ.230.97 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுதோறும் பதிவு செய்யும் வழக்குகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. மோசடிகளின் அளவும் அதிகம். இதில் பெரும்பாலும் ஏழைகள் தான் அறியாமையால் பாதிக்கின்றனர். வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் டான்பிட் சட்டப்படி சொத்துக்களை முடக்கி, விற்பனை செய்யும் பணிகளை மேற்கொள்வதற்காக ஐஏஎஸ் அதிகாரி அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை சிறப்பு அலுவலர்களாக நியமிக்கலாம். அப்போது பாதிக்கப்பட்டோருக்கும், பொதுமக்களுக்கும் நம்பிக்கை அதிகரிக்கும். எனவே, 1,537 நாட்கள் தாமதமாக மனு செய்ததில் எந்த தவறும் இல்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த உத்தரவின் விபரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

The post மோசடி வழக்கில் முடக்கப்பட்ட சொத்தை விற்க ஐஏஎஸ் அல்லது ஓய்வு நீதிபதியை சிறப்பு அலுவலராக நியமிக்கலாம்: ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : IAS ,iCourt ,Madurai ,Global Capital Trading services ,Dinakaran ,
× RELATED ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம்: ஐகோர்ட் யோசனை