×

அறுசுவை உணவுடன் கர்ப்பிணி குதிரைக்கு கோயிலில் வளைகாப்பு: மொய் எழுதிய ஊர் மக்கள்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே அம்மன்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் கோயில். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், கோவிலுக்கு குதிரையை காணிக்கையாக வழங்கியுள்ளார். காணிக்கையாக வழங்கப்பட்ட குதிரை அம்மன்பாளையம் பொது மக்களிடம் அன்போடு பழகி வருகிறது. தற்போது, இந்த குதிரை 9 மாத கர்ப்பமாக உள்ளது. இதைத்தொடர்ந்து, பாசமாக பழகி வரும் குதிரைக்கு அம்மன்பாளையம் பகுதி பக்தர்கள், பொதுமக்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில், நேற்று அப்பகுதி ஊர்மக்கள் ஒன்று கூடி குதிரைக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை தடபுடலாக நடத்தினர்.

இதற்காக, குதிரைக்கு புதிய சேலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து, கிராம மக்கள் குதிரையின் கழுத்தில் வளையல் போட்டு விட்டனர். பின்னர், அறுசுவை உணவை தயாரித்து, வளைகாப்புக்கு வந்த ஊர் பொதுமக்களுக்கு விருந்து படைத்தனர். சிலர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு மொய்ப்பணம் வைத்தனர். அந்த பணத்தை குதிரையின் சேலையில் பின் குத்தி வைத்தனர். வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. கோயில் குதிரைக்கு வளைகாப்பு நடந்த சம்பவம் பக்தர்கள், கிராம மக்களிடம் நெகிழ்ச்சியையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

The post அறுசுவை உணவுடன் கர்ப்பிணி குதிரைக்கு கோயிலில் வளைகாப்பு: மொய் எழுதிய ஊர் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Mariamman ,Temple ,Ammanpalayam ,Antheur, Erode district ,Salem district ,
× RELATED எசனை காட்டு மாரியம்மன் கோயில் தேரோட்டம்