×

கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்ல தயாராகும் மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்: மருத்துவ நிபுணர் ஆலோசனை

தாம்பரம்: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து சில நாட்களில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால், பள்ளிக்கு செல்லும் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் கல்வி முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான சவாலை பெற்றோர்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. கோடை விடுமுறை என்றால் பள்ளி மாணவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு காலமாக இருந்து வருகிறது. காரணம் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு செல்லாமல் படிக்காமல் அவர்கள் இஷ்டத்திற்கு விளையாடலாம்.

ஏன் படிக்கவில்லை என பெற்றோர்கள் கேட்க மாட்டார்கள், ஹோம் ஒர்க் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என பல காரணங்கள் உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, கடந்த 2 ஆண்டுகள் பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வெளியே செல்ல முடியாமல், நண்பர்களை பார்க்க முடியாமல், அவர்களுடன் விளையாட முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்த அவர்கள், மீண்டும் எப்போது பள்ளி திறப்பார்கள் என்ற மனநிலைக்கு வந்திருந்தனர்.

இதனையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகள் திறந்தவுடன் உற்சாகமாக பள்ளிக்கு சென்று, அவர்களது நண்பர்களை சந்தித்து மீண்டும் வழக்கமான பள்ளி அனுபவத்தை பெற தொடங்கினர்.
இந்நிலையில் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்து, கோடை விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் விடுமுறையில் நண்பர்களுடன் விளையாடுவது, குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது என நேரத்தை கழித்து வந்தனர்.

தற்போது கோடை விடுமுறை முடிந்து, இன்னும் சில நாட்களில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. எனவே, விளையாட்டு மனநிலையில் இருக்கும் மாணவர்களை பள்ளி மற்றும் படிப்பின் மீது கவனம் செலுத்த பெற்றோர்கள் நடவடிக்கை எடுப்பதோடு, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வழிமுறைகள் குறித்து பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதற்காக பெற்றோர்களுக்கு, மருத்துவர்கள் சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு, ஆலோசனைகள் மற்றும் குறிப்புகளை, கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவ பிரிவு மூத்த ஆலோசகர், மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் பெருமாள் கர்ணன் கூறியதாவது:
அரசு மற்றும் சுகாதார அதிகாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். பள்ளிகள் திறப்பு, பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான அறிவிப்புகள் குறித்து அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்கள், தொலைக்காட்சி, பத்திரிகைகள் மற்றும் பள்ளியின் தகவல் தொடர்பு சேனல்கள் உள்ளிட்டவற்றை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்வதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் குறித்து பட்டியலிட்டு வைத்துக்கொள்ள வேண்டும். அதில் முகக்கவசம், சானிடைசர் மற்றும் தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை முக்கியமாக இருக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கை குறித்து குழந்தையுடன் கலந்தாலோசித்து, பள்ளியில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறை குறித்து குழந்தையிடம் எடுத்துக்கூற வேண்டும். முகக்கவசம் அணிவதன் கட்டயாம், கைகளை தூய்மையாக வைத்திருப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் பரிமாற்றத்தை தவிர்த்தல் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் எடுத்துக்கூற வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் தங்களின் ஆரோக்கியத்தையும், மற்றவர்களின் நல்வாழ்வையும் அது பாதுகாக்கும் நடவடிக்கைகள் என்பதை குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதிக்காதபடி, அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்கள் செயல்பட வேண்டும். குழந்தைகளுடன் பேசி அவர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் பள்ளி ஆலோசகர்களிடமிருந்து தொழில்முறை உதவி அல்லது வழிகாட்டுதலைப் பெறலாம். குழந்தைகளுக்கு உணவில் பலவகையான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்களை சேர்த்து கொடுப்பது நல்லது. சத்தான உணவு என்பது குழந்தைகளின் செறிமானம், ஆற்றல் நிலை என ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துகிறது. மேலும் அவர்கள் படிப்பில் சிறப்பாக விளங்கவும், உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாக இருக்கிறது.

குழந்தைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்ட நேரம் தூங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். சிறப்பான தூக்கத்திற்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல், படுக்கை அறையில் குறைந்த வெளிச்சம் கொண்ட பல்புகளை பயன்படுத்த வேண்டும் மற்றும் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களை வயதுக்கு ஏற்ற உடற்பயிற்சிகள், விளையாட்டுகளில் ஈடுபட பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவை அவர்களின் மனநிலையை அதிகரிக்கவும், கவனத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக குழந்தைகள் கல்வியில் பின்தங்கியிருந்தால், அவர்களின் கற்றல் இடைவெளிகளை போக்க தேவையான நடவடிக்கையை எடுத்து குழந்தைகளின் ஆசிரியர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுவதோடு, பல்வேறு கூடுதல் பயிற்சிகள் மற்றும் ஆன்லைன் கல்வித் தளங்களை அணுகி அதற்குத் தகுந்த பயிற்சிகளை குழந்தைகளுக்கு அளித்திட வேண்டும். குழந்தைக்கு சுகாதார நடைமுறைகளின் முக்கியத்துவத்துவம் குறித்து மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டும்.

இருமல் அல்லது தும்மலின்போது வாய் மற்றும் மூக்கை மூடுவதற்கும், முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும், குறைந்தது 20 வினாடிகளுக்கு சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை நன்கு கழுவவும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். சோப்பும் தண்ணீரும் கிடைக்காத நிலையில், சானிடைசரை பயன்படுத்துமாறு குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். குழந்தைகள் பள்ளி போக்குவரத்தைப் பயன்படுத்தினால், பள்ளி அல்லது போக்குவரத்து சேவை வழங்குனரால் செயல்படுத்தப்படும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பற்றி தெரிந்து கொண்டு பயணத்தின்போது முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று திரும்புவதை உறுதி செய்வதில் பெற்றோர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். இது தொடர்பான தகவல்களை அறிந்து வைத்திருப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலம், அவர்களை பள்ளிக்கு பெற்றோர்கள் நம்பிக்கையுடன் அனுப்பி வைக்கலாம்.

மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி குழந்தைகளின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு ஆரோக்கியம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு பெற்றோர்கள் எப்போதும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவற்றை கடைபிடிப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளின் கல்வி பயணத்தில் சிறப்பானதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவிட் தடுப்பூசி
குழந்தைகளுக்கான தடுப்பூசி செயல்முறை குறித்து தொடர்ந்து தெரிந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான கோவிட் – 19 தடுப்பூசிகளுக்கான சமீபத்திய வழிகாட்டுதல் நெறிமுறைகளை தெரிந்துகொள்ள குழந்தை மருத்துவர் அல்லது சுகாதார சேவை வழங்குனரைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

கலந்துரையாடுங்கள்
குழந்தைகள் பள்ளிக்கு சென்று திரும்புவதற்கு இடையே பெற்றோர்களின் உடல் நலனிலும் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியம். பெற்றோர்கள் பணிக்கு இடையே சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் விரும்பும் செயல்களில் ஈடுபடுங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் கலந்துரையாடுங்கள், இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு நீங்களே புத்துணர்ச்சி ஏற்படுத்திக் கொள்வதோடு உங்கள் பிள்ளைகளையும் சிறப்பாக கவனிக்க முடியும்.

கவனிக்க வேண்டும்
குழந்தைகள் தனியார் போக்குவரத்தில் செல்லும்பட்சத்தில் அவர்களை பள்ளிக்கொண்டு சென்று விடுதல் மற்றும் வீட்டிற்கு திரும்ப அழைத்து வருதல் குறித்து முறையாக திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். பள்ளியில் சந்தேகத்திற்கிடமான அல்லது நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் குழந்தையை தனிமைப்படுத்த அவர்களை தயார்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட காலகட்டங்களுக்கான பள்ளியின் நெறிமுறைகள் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.

The post கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்ல தயாராகும் மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்: மருத்துவ நிபுணர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Tamil Nadu ,Medical Expert Consulting ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை...