×

‘கையேந்துவது, இனாமாக பெறுவது பிடிக்கவில்லை’; 95 வயதிலும் சுயமாக சம்பாதித்து வாழும் மூதாட்டி: செங்கம் அருகே ஒரு ‘சிங்கப்பெண்’

 

செங்கம்: இன்றைய காலக்கட்டத்தில் எவ்வித ேவலைக்கும் செல்லாமல், அடுத்தவர்களின் வருமானத்தில் சொகுசாக வாழ விரும்புபவர்களை பார்த்திருக்கிறோம். சிலரோ, வயது முதிர்ந்து தனது உடல் ஒத்துழைக்காவிட்டாலும் எப்பாடுபட்டாவது உழைத்து தங்கள் குடும்பத்தை காப்பவர்களையும் பார்த்துள்ளோம். இவ்வாறு வயது முதிர்வாலும் உழைப்பவர்கள் நோய்நொடி இன்றி எப்போதும் சுறுசுறுப்பாகவே காணப்படுவார்கள். இதுபோன்ற முதியவர்களை அவ்வப்போது பொது இடங்களில் பார்த்து வியக்கிறோம். இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 95 வயதிலும் வேர்க்கடலை விற்றுவரும் மூதாட்டியின் உழைப்பு அனைவரையும் ஈர்த்து வருகிறது.

அதுபற்றிய விவரம்: செங்கம் அருகே உள்ள புதுச்சேரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மண்டி உள்ளது. இந்த மண்டிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் வேர்க்கடலை உள்ளிட்ட தானியங்கள் கொண்டுவரப்படுகிறது. அங்கிருந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. இந்நிலையில் அங்கு மூட்டைகளில் இருந்து சிதறும் வேர்க்கடலையை தினமும் 95 வயது மூதாட்டி ஒருவர் தள்ளாடியபடி வந்து அவற்றை சேகரித்து வருகிறார். பின்னர் அதனை அதே இடத்தில் அமர்ந்து சுத்தம் ெசய்து வெளியிடங்களுக்கு சென்று விற்று வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, செங்கம் அருகே உள்ள குக்கிராமத்தில் இருந்து வருகிறேன். எனக்கு மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் உள்ளனர். ஆனால் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை.

தினமும் மண்டி அருகே வந்து அங்கு சிதறிக்கிடக்கும் வேர்க்கடலைகளை சேகரிப்பேன். அதனை சுத்தம் செய்து விற்பேன். யாரிடமும் கையேந்துவது பிடிக்காது. எனக்கு பணம், சாப்பாடு என யார் இலவசமாக கொடுத்தாலும் பெறுவது பிடிக்காது. தினமும் எனக்கு ஓரளவு காசு கிடைக்கிறது. அதைக்கொண்டு வெற்றிலை பாக்கு அல்லது பிடித்த உணவு வாங்கி சாப்பிடுவேன். பேரப்பிள்ளைகளுக்கும் காசு தருவேன். இவ்வாறு கூறினார். அங்கிருந்த வியாபாரிகள் கூறுகையில், அந்த மூதாட்டி தினமும் வந்து பொறுமையாக வேர்க்கடலைகளை சேகரிப்பார். நாங்கள் ஏதாவது காசு கொடுத்தால்கூட வாங்க மாட்டார். அவரது சுறுசுறுப்பான உழைப்பை பார்த்து நாங்கள் பலமுறை நெகிழ்ந்துள்ளோம். என்றனர்.

The post ‘கையேந்துவது, இனாமாக பெறுவது பிடிக்கவில்லை’; 95 வயதிலும் சுயமாக சம்பாதித்து வாழும் மூதாட்டி: செங்கம் அருகே ஒரு ‘சிங்கப்பெண்’ appeared first on Dinakaran.

Tags : Sengam ,
× RELATED அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த...