×

ஆளுநர் ஆர்.என்.ரவியின் மெத்தனத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் தாமதம்; 3 லட்சம் மாணவர்கள் பாதிப்பு..கல்வியாளர்கள் கண்டனம்..!!

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியின் மெத்தனத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் தாமதமாவதாக புகார் எழுந்துள்ளது.

பட்டம் பெற முடியாமல் காத்திருக்கும் மாணவர்கள்:

திருச்சி, கோவை, நெல்லை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021, 2022ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

ஆளுநர் அலட்சியத்தால் மாணவர்கள் பாதிப்பு:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தாமதமாவதால் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 2 முறை அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் நேரம் கிடைக்காததன் காரணமாகவே பட்டமளிப்பு விழா தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் 2 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் உள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் மெத்தனத்தால் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் படித்த 40,000 மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதேபோல் ஆளுநரின் நேரம் கிடைக்காததால் கோவை வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவும் தாமதம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டமளிப்பு விழா நடைபெறாததால் முக்கிய பல்கலைக்கழகங்கள், அதற்கு உட்பட்ட உறுப்பு கல்லூரிகளில் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கல்வியாளர்கள், மாணவ சங்கங்கள் கண்டனம்:

பட்டமளிப்பு விழா தாமதமாவதற்கு கல்வியாளர்கள், மாணவ சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடனடியாக பட்டமளிப்பு விழாவை நடத்த மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியலை கருத்தில் கொள்ளாமல் பட்டமளிப்பு விழாவை உடனடியாக நடத்த ஆளுநருக்கு கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆளுநர் இன்றி பட்டமளிப்பு விழா நடத்த கோரிக்கை:

ஆளுநராக ரவி பதவியேற்ற பிறகே பட்டமளிப்பு விழாவில் இந்த அளவுக்கு தாமதம் ஏற்படுவதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆளுநர் இன்றியே பட்டமளிப்பு விழா நடத்த பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது கல்வியாளர்கள் குற்றச்சாட்டு:

அரசியல் சார்பின்றி செயல்பட வேண்டும் என்பதற்காகவே ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சார்பின்றி செயல்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆளுநர் நேரில் வர இயலாவிட்டால் ஆன்லைன் மூலம் பட்டங்களை வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு:

மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பட்டத்தை வழங்க வேண்டிய பொறுப்பு துணைவேந்தர்களுக்கு உள்ளது என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் நடத்திய துணைவேந்தர் மாநாட்டில் பட்டமளிப்பு விழா பற்றி பேசாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், துணைவேந்தர் மாநாட்டில் கல்விக்கு தொடர்புடைய விஷயங்களை பேசிய ஆளுநர் மாணவர்கள் நலன் குறித்து பேசினாரா என சாடியுள்ளார்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவியின் மெத்தனத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் தாமதம்; 3 லட்சம் மாணவர்கள் பாதிப்பு..கல்வியாளர்கள் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor RN ,Ravi ,CHENNAI ,Governor RN Ravi ,
× RELATED மறைந்த வேளாண் விஞ்ஞானி...