×

கோவையில் உணவகத்தை அபகரித்து கட்சி கொடி பாஜவினர் உட்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு: அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

கோவை: கோவை சாய்பாபா காலனி ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை (47). இவர், பாஜ கட்சி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக இருந்தார். இவர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி புகார் மனு அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பழைய சோறு டாட்.காம் என்ற பெயரில் உணவகங்களுக்கு மூலிகை பொருட்கள் அனுப்பும் கடை நடத்தி வருகிறேன். சாய்பாபா காலனி ராமலிங்கம் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவரின் கட்டிடத்தில் வாடகை அடிப்படையில் கடை நடத்தினேன். பழனிச்சாமிக்கும் எனக்கும் வாடகை, ஒப்பந்த விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

நான் பாஜவில் இருப்பதால், பழனிச்சாமி, மாநில தலைவர் அண்ணாமலையிடம் இதுபற்றி பேசியிருக்கிறார். அவர் மாவட்ட செயலாளர் உத்தம ராமசாமி மற்றும் சிலரை அனுப்பி எனக்கு தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை அபகரித்து சென்று விட்டனர். அங்கு பாஜவின் கொடி கட்டி, சேவா மையம் என போர்டு வைத்துள்ளனர். இதுபற்றி கேட்டதற்கு எதுவாக இருந்தாலும் மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேசிக்கொள் என என்னை மிரட்டி வருகின்றனர். எனவே அண்ணாமலை, உத்தம ராமசாமி மீது போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக சாய்பாபா காலனி போலீசார் விசாரித்தனர். ஆனால், கடந்த 13 நாட்களுக்கும் மேலாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த அண்ணாதுரை கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மீண்டும் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு சாய்பாபா காலனி போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து உணவகத்தை அபகரித்து பாஜ கட்சி போர்டு வைத்து, கொடி கட்டிய விவகாரம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் பழனிசாமி, அவரது மகள் பிருந்தா, பாஜவை சேர்ந்த குமரன், செந்தில், கோபி, துரைபாண்டி உள்ளிட்ட 16 பேர் மீது போலீசார் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கோவை மாவட்ட பாஜ தலைவர் உத்தம ராமசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post கோவையில் உணவகத்தை அபகரித்து கட்சி கொடி பாஜவினர் உட்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு: அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Annamalai ,Annadurai ,Ramalingam Nagar, ,Saibaba Colony, Coimbatore ,BJP ,Dinakaran ,
× RELATED கோவையில் தேர்தல் நடத்தை விதிகளை...