×

கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் 2023-2024ம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக்க நாளான நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

தமிழகமெங்கும் நெடுஞ்சாலை துறையின் 340 சாலைகளில் மகிழம், வேம்பு, புளி, புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகையை சார்ந்த சுமார் 46,410 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இந்த மரங்கள் 24 மாத காலம் வளர்ச்சி கொண்டவையாகும். மேலும், பருவமழைக்கு முன்பாகவே 5 லட்சம் மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநர் அண்ணாதுரை, நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு தலைமை பொறியாளர் இரா.சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Artist's ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Highway Research Institute ,Guindy ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...