×

ரூ.1,000 கோடி மதிப்புள்ள 115 கிரவுண்ட் அரசு நிலம் அதிரடியாக மீட்பு கலைஞர் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் முடித்து வைத்தார்: ஆங்கிலேயர் காலத்து தோட்டக்கலை சங்கம் பற்றிய பரபரப்பு தகவல்

சென்னை: சென்னையின் மைய பகுதியான அண்ணா மேம்பாலத்துக்கு அருகே இருந்த தமிழக அரசுக்கு சொந்தமான ரூ.1000 கோடி மதிப்பிலான 115 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அரசு கைப்பற்றியுள்ளது. நிலத்தை மீட்க காரணமாக இருந்த அதிகாரிகள், வழக்கறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கதீட்ரல் சாலையின் இரு பகுதிகளிலும் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. ஆங்கிலேயர்கள், தங்களது வீடுகளில் தோட்டம் அமைத்து பராமரித்தனர். அதற்கான செடி, நாற்றுகளை உருவாக்க தொடங்கப்பட்டதுதான் மெட்ராஸ் வேளாண் தோட்டக்கலை சங்கம். இச்சங்கத்துக்கு அரசால் அளிக்கப்பட்டு வந்த குத்தகை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.

1964, 1980ம் ஆண்டுகளில் இந்த நிலத்தை திரும்ப பெற அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலத்தின் மீதான அரசின் உரிமையை வேளாண் தோட்டக்கலை சங்கம் நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்ட நிலையில், 1980ம் ஆண்டில் இந்த நிலம் மீண்டும் அச்சங்கத்திற்கே வழங்கப்பட்டது. அந்த நிலம் தனிநபர்களின் லாப நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதால் 1989ம் ஆண்டில், அதை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அப்போதைய முதல்வர் கலைஞர் முயற்சிகள் மேற்கொண்டார். அதற்கெதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1998ம் ஆண்டு ஜூன் 19 அன்று பிறப்பித்த உத்தரவில், நிலத்தை திரும்ப எடுத்துக்கொண்ட திமுக அரசின் ஆணையை ரத்து செய்தது. 2001ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்தது. திமுக ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டில் இறுதி தீர்ப்பு வழங்கப்படாமல் வழக்கு நிலுவையில் இருந்தது.

உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து வழக்கை தொடர 2006ல் திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, தோட்டக்கலை சங்கம், உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கு, 2007ல் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களின் மீதான வழக்கில், உயர் நீதிமன்றம் 2008ல் வழங்கிய தீர்ப்பில்; திமுக அரசு செய்த மேல் முறையீட்டு மனுக்களை அனுமதித்தும், நிலத்தை அரசு திரும்ப எடுத்துக் கொள்ள பிறப்பித்த திமுக அரசின் ஆணையை ரத்து செய்து தனி நீதிபதி 1998ல் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் தோட்டக்கலை சங்கம் தாக்கல் செய்த மேல் முறையீட்டின் இடைக்கால ஆணையில் தோட்டக்கலை மேம்பாட்டுக்காக மீட்கப்பட்ட நிலத்தை அரசு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக செம்மொழி பூங்கா தொடங்கப்பட்டது. இதற்கிடையே ஆகஸ்ட் 22, 2011 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் செம்மொழி பூங்காவுக்கு எதிரில் இருந்த நிலத்தை தோட்டக்கலை சங்கம் தொடர்ந்து பயன்படுத்தி வரும் வகையில் உத்தரவு பிறப்பித்தார்.

ஆட்சியரின் அந்த உத்தரவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று நவம்பர் 1, 2011 அன்று நில நிர்வாக ஆணையரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நில நிர்வாக ஆணையரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கை நவம்பர் 25, 2022 அன்று தனி நீதிபதி தள்ளுபடி செய்ததார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து வேளாண் தோட்டக்கலை சங்கம் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டை மார்ச் 6 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மேல் முறையீட்டாளருக்கு உரிய வாய்ப்பளித்த பிறகு நில நிர்வாக ஆணையர் சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளவும் அனுமதி அளித்தது.

இதை அடுத்து, வருவாய் துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர். மாநகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியாரிடம் இருந்து மீட்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் தொடர் சட்ட முயற்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் இது. இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நில நிர்வாக ஆணையர் ஆகியோர் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜரானார். வழக்கில் மேலும் ஒரு தரப்பினராக இணைத்துக்கொண்ட ஒய்.புவனேஷ்குமாருக்காக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். வழக்கில் கிடைத்த வெற்றியை அடுத்து நில நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய பாராட்டினையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

The post ரூ.1,000 கோடி மதிப்புள்ள 115 கிரவுண்ட் அரசு நிலம் அதிரடியாக மீட்பு கலைஞர் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் முடித்து வைத்தார்: ஆங்கிலேயர் காலத்து தோட்டக்கலை சங்கம் பற்றிய பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : 115Ground Government Land ,Chief Minister ,M.D. G.K. Stalin ,Englishman Periodical Horticulture Association ,Chennai ,Government of Tamil Nadu ,Anna Phavalam ,Government Land Action Rescue Artist ,English Periodical Horticulture Association ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...