*கொடைக்கானலில் பரபரப்பு
கொடைக்கானல் : சகோதரருடன் கடை பாதை பிரச்னையில் காஷ்மீரை சேர்ந்தவர் நடுரோட்டில் தீக்குளித்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் பயாஸ் ராஜா (60), ஷபீர் ராஜா (58). இவர்கள் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிளிஸ்வில்லா பகுதியில் வசித்து கொண்டு, கவி தியாகராஜர் சாலையில் கடைகள் வைத்து கைவினை, கிராப்ட் பொருட்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். மேல் தளத்தில் பயாஸ் ராஜா, கீழ் தளத்தில் ஷபீர் ராஜா கடை வைத்துள்ளனர்
இருவருக்கும் நீண்ட காலமாக கடைக்கு செல்லக்கூடிய நடைபாதை வழி பிரச்னை இருந்து வந்தது.
பயாஸ்ராஜா ஒரு கட்டத்தில் சாலையில் இருந்து கடைக்கு செல்வதற்கு இரும்பு நடைபாதை அமைத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஷபீர் ராஜா, இரும்பு நடைபாதையை அகற்றியதாக கூறப்படுகிறது. இதனை பயஸ் ராஜா கண்டித்ததாகவும், மேல் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.இதனால் விரக்தியில் இருந்த ஷபீர் ராஜா நேற்று பட்டப்பகலில் சாலையில் நின்றபடி உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார்.
இதை கண்ட அப்பகுதி வியாபாரிகள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் ஷபீர் ராஜா உடலில் தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்கு பின் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
The post சகோதரருடன் பாதை பிரச்னை காஷ்மீரை சேர்ந்தவர் நடுரோட்டில் தீக்குளிப்பு appeared first on Dinakaran.