×

ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம் உக்ரைன் அணை குண்டு வைத்து தகர்ப்பு: ரஷ்யா மீது குற்றச்சாட்டு

கீவ்: பிரதான அணையை குண்டு வைத்து தகர்த்ததாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைனில் ககோவ்கா நீர்மின் நிலைய அணை உள்ளது. இந்த அணை தான் நீர் மின்நிலையத்துக்கு நீரை வழங்கக்கூடிய பிரதான அணையாகும். மேலும் இங்கிருந்து தான் ரஷ்யாவின் சபோரிஸ்சியா அணுமின் நிலையத்திற்கும் தண்ணீர் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் ககோவ்கா அணையை ரஷ்யா குண்டு வைத்து சேதப்படுத்தியதால் அணை உடைந்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணை அருகே வசிக்கும் 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கெர்சன் நகரின் ஒரு பகுதியில் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி உக்ரைன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அணையில் இருந்து நீர் வெளியேறி வருவதால் அணுமின் நிலையத்தின் குளிரூட்டல் நிலையம் செயல்பாட்டை இழந்துவிடும் என்றும் வடக்கு கிரிமியாவிற்கு நீர்விநியோகம் தடை படும் என்றும் உக்ரைன் போர் சுற்றுச்சூழல் விளைவுகள் பணிக்குழு எச்சரித்துள்ளது.

நீர்மின் நிலையம் மீதான இத்தகைய தாக்குதலை மிக மோசமான தீவிரவாத செயல் என்று உக்ரைன் விமர்சித்துள்ளது. இந்நிலையில் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் அதிபர் ஜெலன்ஸ்கி அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ககோவ்கா அணை உக்ரைன் ராணுவ தாக்குதலில் தான் சேதமடைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

The post ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம் உக்ரைன் அணை குண்டு வைத்து தகர்ப்பு: ரஷ்யா மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russia ,Kiev ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...