×

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இந்தியா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை: லண்டனில் பிற்பகல் 3.00 மணிக்கு தொடக்கம்

லண்டன்: இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியஷிப் இறுதிப் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது. ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் உலக கோப்பை போட்டி நடப்பதை போல, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் உலக சாம்பியன்ஷிப் போட்டியை கடந்த 2019ல் ஐசிசி அறிமுகம் செய்தது. இதில் 9 அணிகள் பங்கேற்ற நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா – நியூசிலாந்து அணிகள் 2021 பைனலில் மோதின. சவுத்தாம்ப்டனில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதலாவது உலக டெஸ்ட் சாம்பியனாக முடிசூடியது.

அடுத்து 2021-23 சீசன்களில் நடந்த போட்டிகளின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கும் பைனலில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக உலக டெஸ்ட் பைனலில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த காலம் என ஒன்று இருந்தது. ஆனால், 2017ல் இருந்து இரு அணிகளுக்கும் இடையே நடந்த 4 டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணியே கைப்பற்றி ஆஸி. ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது. அதிலும், பலம் வாய்ந்த ஆஸி. அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.

கடைசியாக இந்தியாவில் நடந்த தொடரையும் ரோகித் தலைமையிலான இந்திய அணியே வென்றது. அந்த தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற ஆல் ரவுண்டர்கள் அஷ்வின், ஜடேஜா ஆகியோருடன் மீண்டும் ஆட்டத்திறனுக்கு திரும்பியுள்ள புஜாரா, ரகானே, கில் ஆகியோர் அணியில் இருப்பது கூடுதல் பலம். அத்துடன் ரோகித், கோஹ்லியின் அனுபவமும் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்கிறது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப சரியான பந்துவீச்சு கூட்டணியை தேர்வு செய்வதில் தான் வெற்றிக்கான ஃபார்முலா உள்ளது என்பதை அணி நிர்வாகம் நன்கு உணர்ந்துள்ளது.

காயமடைந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டுக்கு பதிலாக ஸ்ரீகர் பரத் அல்லது இஷான் கிஷன் களமிறங்க உள்ளனர். கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி. அணியும் உலக டெஸ்ட் சாம்பியனாகும் முனைப்புடன் வரிந்துகட்டுகிறது. ஒருநாள், டி20 உலக கோப்பைகளை அதிக முறை வென்ற அணியாக ஆஸி. இருக்கிறது. அதனால் டெஸ்ட் உலக கோப்பையிலும் கணக்கை தொடங்க துடித்துக் கொண்டு இருக்கிறது. அதற்கு ஏற்ப அதிரடி வீரர்கள் வார்னர், ஸ்மித், கவாஜா, லபுஷேன், அலெக்ஸ், கிரீன், ஹெட் என அந்த அணியின் பேட்டிங் வரிசையும் மிரட்டலாகவே அமைந்துள்ளது. கம்மின்ஸ், ஸ்டார்க், போலண்ட், நெசர், லயன், மர்பி ஆகியோரின் பந்துவீச்சும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.

* சாம்பியனுக்கு கிடைப்பது வெறும் ‘கதை’யல்ல… வரலாறு!
உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு கதாயுதம் வடிவிலான கோப்பையும், முதல் பரிசாக ரூ.13.22 கோடியும் வழங்கப்படும். பைனலில் தோற்று 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.60 கோடி கிடைக்கும். இது தவிர 3 முதல் 9வது இடம் வரை பிடித்த அணிகளுக்கும் கணிசமான பரிசுத் தொகை காத்திருக்கிறது.

* இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஆர்.அஷ்வின், கே.எஸ்.பரத் (கீப்பர்), ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, விராத் கோஹ்லி, இஷான் கிஷன் (கீப்பர்), செதேஷ்வர் புஜாரா, அக்சர் படேல், அஜிங்க்யா ரகானே, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனத்கட், உமேஷ் யாதவ். ரிசர்வ் வீரர்கள்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், சூரியகுமார் யாதவ்.

* ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், டாட் மர்பி, மைகேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர். ரிசர்வ் வீரர்கள்: மிட்செல் மார்ஷ், மேட் ரென்ஷா.

The post ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இந்தியா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை: லண்டனில் பிற்பகல் 3.00 மணிக்கு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : ICC World Test Championship Final ,India ,Australia ,London ,ICC World Test Championship ,London Oval, India ,Balaperite ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை