×

மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் புகைப்படம் எடுக்கவோ, அதை சமூக வலைதளங்களில் பதிவிடவோ தடை விதிக்க இயலாது; மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். மனுவில் உலக பிரசித்திபெற்றதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இருந்து வருகிறது. இந்த கோயிலில் புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலின் உள்ளே எலக்ட்ரானிக்கல் சாதனங்கள் கொண்டு செல்ல ஏற்கனவே தடை உள்ள நிலையில், சில தனியார் நிறுவனங்களுக்கு மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் ஒப்பந்தம் முறையில் அனுமதி கொடுத்துள்ளது.

எனவே மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சிற்பங்கள், சிலைகளின் புகைப்படம், வீடியோக்களை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கோயில் தரப்பில், புகைப்படம் எடுப்பதற்கு குறிப்பிட்ட சில நபர்களை கோயில் நிர்வாகம் ஒப்பந்தம் முறையில் நியமனம் செய்துள்ளது. அவர்கள் உரிய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு தான் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

கோயில் தரப்பு பதிலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் 100 ஆண்டுகள் பழமையான புராதன சின்னங்கள் எனக்கூறி படங்களை எடுத்து பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்கின்றனர். நாம் 2,000 ஆண்டுகள் பழமையான புராதன சின்னங்களை வைத்துக் கொண்டு எதுவும் செய்யாமல் இருக்கின்றோம் என்று கருத்து தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் தான் நாளைய சமுதாயத்திற்கும் இதன் மதிப்பு தெரியும். எனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் புகைப்படம் எடுக்கவோ, அதை சமூக வலைதளங்களில் பதிவிடவோ தடை விதிக்க இயலாது என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் புகைப்படம் எடுக்கவோ, அதை சமூக வலைதளங்களில் பதிவிடவோ தடை விதிக்க இயலாது; மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.

Tags : Meenakshi Amman Temple ,ICourt Branch ,Madurai ,High Court ,Muthukumar ,Dinakaran ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்...