×

ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்ற வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

ஊட்டி: நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். ஊட்டி ராஜ்பவனில் ‘உயர்கல்வி நிறுவனங்களின் பாடப்புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பது’ என்ற தலைப்பில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று நடந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது: நவீன காலத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். மாணவர்களை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மெருகேற்ற வேண்டும். தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கியது. தற்போது வளரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களுக்கு படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பாலிடெக்னிக், ஐடிஐ., மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளைவிட நல்ல வேலை கிடைகிறது. இதனால் குறைந்த ஊதியத்தில் பொறியியல் மாணவர்கள் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இளைஞர்களுக்கு காலத்திற்கு ஏற்ற கல்வி கிடைக்காததால் அவர்கள் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில மற்றும் தேசிய வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. கல்வியில் மாற்றம் அவசியம். தேசிய கல்வி கொள்கையில் இளைஞர்களுக்கு அவர்களின் திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட வேண்டும். தமிழகத்தில் உள்ள மாநில அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் சிறந்த கல்வி மற்றும் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம். ஜெகதேஷ் குமார் ஆன்லைன் மூலம் துணைவேந்தர்களிடம் உரையாற்றினார். மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 18 அரசு பல்கலைக்கழகம் மற்றும் 2 தனியார் பல்கலைக்கழகம் என 20 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்துகொண்டனர்.

The post ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்ற வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Vice-Chancellors' conference ,Ooty ,Governor ,RN ,Ravi ,Vice-Chancellors Conference ,
× RELATED படகு இல்லம் செல்லும் நடைபாதை சீரமைக்கும் பணிகள் துவக்கம்