×

அரசு விழாவுக்கு கேட்டின் மீது ஏறி குதித்து சென்ற புதுவை எம்எல்ஏ: தலைமை செயலர் மீது சரமாரி புகார்

புதுச்சேரி: புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் தொய்வை கண்டித்து முதல்வர் பங்கேற்ற அரசு விழாவில் தலைமை செயலரிடம் வாக்குவாதத்தில் எம்எல்ஏ ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை தலைமை செயலர் ஆய்வு செய்வதில்லை. இத்திட்டங்கள் காலதாமதமாக நடப்பதாக கூறி புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ நேரு, நேற்று புதுச்சேரி தலைமை செயலகம் முன்பு ஆதரவாளர்களுடன் முற்றுகை போராட்டம் நடத்தினார். கம்பன் கலையரங்கில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் ரங்கசாமி மற்றும் தலைமை செயலர் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் ஆதரவாளர்களுடன் அங்கு சென்றார்.

அவரை உள்ளே விடாமல் அரங்கின் வாயில் கதவை போலீசார் இழுத்து பூட்டினர். இதனால் 8 அடி உயரமுள்ள கேட்டின் மீது ஏறி எம்எல்ஏ நேரு உள்ளே குதித்தார். அவரை தொடர்ந்து ஆதரவாளர்களும் உள்ளே குதித்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொடுத்த நிதியை கொண்டு நகரை சுத்தம் செய்யாமல், சுற்றுச்சூழல் விழாவில் கலந்து கொள்வதில் என்ன பயன். ஊரெல்லாம் நாறிக்கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தவில்லை. தலைமை செயலர் தான் அதற்கு சேர்மன், உப்பனாறு எங்கே இருக்கிறது. ஒருமுறையேனும் வந்து பார்த்திருக்கிறாரா? எனக் கேட்டு எம்எல்ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருவழியாக விழா ஏற்பாட்டாளர்கள் அவரை சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். இதனால் அரசு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

The post அரசு விழாவுக்கு கேட்டின் மீது ஏறி குதித்து சென்ற புதுவை எம்எல்ஏ: தலைமை செயலர் மீது சரமாரி புகார் appeared first on Dinakaran.

Tags : Puduvai ,MLA ,Chief Secretary ,Puducherry ,Chief Minister ,Puduvai MLA ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...