×

களத்தில் பொறுமையுடன் நீண்ட நேரம் இருக்க வேண்டும்: இங்கிலாந்து மைதானங்கள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி

ஓவல்: இங்கிலாந்து மைதானங்களில் எப்படி விளையாடவேண்டும் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது வியூகத்தை தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்னும் இரு நாட்களில் ஜூன் 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதி போட்டிக்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது இந்திய அணிக்கு இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசியின் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியை தழுவி இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது ஐசிசி உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணியினர் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் டெஸ்ட் உலகக் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றனர். ஏற்கனவே இந்திய அணி தனது கடைசி டெஸ்ட் தொடரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்து மைதானங்களில் விளையாடுவது எப்பொழுதும் சவாலான ஒன்றாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, நீங்கள் எவ்வளவு சிறப்பாக உங்களை பயிற்சி செய்து தயார் நிலையில் வைத்திருக்கிறீர்களோ, உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மேலும் இங்குள்ள மைதானங்களில் நீங்கள் நீண்டநேரம் களத்தில் நிற்கவேண்டும், களத்தில் பொறுமையுடன் நீண்ட நேரம் இருக்கவேண்டும், அப்போது தான் உங்களுக்கு களத்தின் தன்மையை புரிந்துகொள்ள முடியும்.

அப்படி நீண்ட நேரம் நீங்கள் களத்தில் இருக்கும் போது, தற்சமயம் பவுலர்களை அதிரடியுடன் எதிர்கொள்ளலாம் என உங்கள் உள்மனதில் ஒரு யோசனை தோன்றும், அதுதான் விளையாட்டு. இதுதவிர உங்களது திறமை மற்றும் வலிமை என்பதை நீங்கள் புரிந்து கொண்டு நீண்ட நேரம் பொறுமையுடன் களத்தில் இருக்கவேண்டும், அப்போது நீங்கள் பவுலர்களை அதிரடியுடன் எதிர்கொண்டால் அணிக்கு அதிக ஸ்கோர் குவிக்கமுடியும் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார். இங்கிலாந்தில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரோஹித் 42.36 சராசரியுடன் 466 ரன்கள் குவித்திருக்கிறார். கடந்த முறை இங்கு(ஓவல்) மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் போது இந்தியா வெற்றி பெற்றிருந்தது, மற்றும் ரோஹித் சர்மா 127 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதும் வென்றிருந்தார். தற்போது ஐபிஎல் தொடர் முடிந்ததும் நேரடியாக டெஸ்ட் போட்டிக்கு தயார் ஆகும்போது முக்கியமாக நீங்கள் உங்களை மனதளவில் தயார் படுத்தவேண்டும்.

The post களத்தில் பொறுமையுடன் நீண்ட நேரம் இருக்க வேண்டும்: இங்கிலாந்து மைதானங்கள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rohit Sharma ,Indian ,England ,India ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’...