×

தொடர்ந்து போராட்டங்கள் நடக்கும் நிலையில் பாஜக எம்பி மீதான பாலியல் புகார் வாபஸ்?: மைனர் மல்யுத்த வீராங்கனை திடீர் முடிவு

டெல்லி: பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரை மைனர் மல்யுத்த வீராங்கனை வாபஸ் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை பதவி நீக்கம் செய்யக் கோரியும், அவரை கைது செய்யக் கோரியும் கடந்த இரு மாதத்திற்கு மேலாக மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா மற்றும் மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதையடுத்து பாஜக எம்பி மீது, இரண்டு எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன. அதில் ஒரு எப்ஐஆரில் மைனர் மல்யுத்த வீராங்கனை கொடுத்த புகாரும் ஒன்றாகும். அதனால் பாஜக எம்பிக்கு எதிராக போக்சோ சட்டப் பிரிவில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் மைனர் பெண் மல்யுத்த வீராங்கனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி, பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த வீராங்கனை புகாரை வாபஸ் பெறும் போது, அவரது தந்தை மற்றும் தாத்தாவும் உடனிருந்தனர். ஆனால், மைனர் வீராங்கனை தனது புகாரை வாபஸ் பெற்றது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே நேற்று அரியானா மாநிலம் சோனேபட் மாவட்டம் முண்ட்லானாவில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ‘சர்வ சமாஜ் சமர்த்தன்’ பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. அப்போது உரையாற்றிய வீராங்கனை பூனியா, ‘எந்த முடிவையும் தற்போது அறிவிக்க வேண்டாம். அடுத்த 3 அல்லது 4 நாட்களில் ‘மஹா பஞ்சாயத்து’ கூட்டத்தை தலைவர்கள் நடத்துவார்கள். அதற்காக அனைவரையும் ஒன்றிணைக்க விரும்புகிறோம்’ என்றார்.

அமித் ஷாவை சந்தித்த வீராங்கனைகள்; பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள், தங்களது பதக்கங்களை கங்கையில் வீசி எறிய முயன்றனர். விவசாய அமைப்புகளின் கோரிக்கையால் பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் பஜ்ரங் பூனியா, வினேஷ், சாக்ஷி மாலிக் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் அமித் ஷாவிடம் பேசிய வீராங்கனைகள், பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்யுமாறு கோரினர். அதற்கு அமித் ஷா, எந்தவித பாகுபாடுமின்றி முழுமையான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதுகுறித்து சாக்ஷி மாலிக்கின் தாயார் சுதேஷ் மாலிக் கூறுகையில், ‘சாக்ஷி, வினேஷ் மற்றும் பஜ்ரங் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சனிக்கிழமை இரவு சந்தித்தனர். அவர் ஆவேசமாக செயல்படுவதற்கு பதிலாக, விவேகத்துடன் செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்’ என்றார்.

The post தொடர்ந்து போராட்டங்கள் நடக்கும் நிலையில் பாஜக எம்பி மீதான பாலியல் புகார் வாபஸ்?: மைனர் மல்யுத்த வீராங்கனை திடீர் முடிவு appeared first on Dinakaran.

Tags : BJP MP ,Delhi ,BJP ,Brij Bhushan Charan Singh ,
× RELATED சூரத் தொகுதியை கைப்பற்ற பாஜக குறுக்கு...