×

வாழ்க்கை + வங்கி = வளம்

நன்றி குங்குமம் தோழி

இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்த நிபுணர்கள் 1970ல் கிராமப்புற குடும்பங்களின் வருமானத்தில் நான்கில் மூன்று பங்கு விவசாயத்திலிருந்து வந்தது என்றும் 2020ல் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது என்று கணக்கிட்டுக் கூறியுள்ளனர். இதன் காரணம் பருவநிலை மாற்றம் காரணமாக கிராமப்புற மக்கள் நகரத்திற்கு புலம்பெயர்ந்து விட்டனர். பொருளாதார வளர்ச்சி அடைந்தாலும், விவசாயிகளின் வளர்ச்சி அந்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை.

நமது நாட்டில் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள், தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் கடன் பெற்றுதான் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் விவசாயிகள் ஈட்டும் பணம் கடனுக்கான வட்டி கட்டுவதற்கே செலவிடுகின்றனர். அதனால் அரசு வங்கிகள், அரசு சார்ந்த நிறுவனங்கள் விவசாயம் சார்ந்த பிற தொழில்களை மேற்கொண்டு நடத்தும்படி விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றன. விளைவு விவசாயிகளின் வருமானமும் சேமிப்பும் பத்து முதல் இருபது ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2013ல் 57% அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், விவசாயம் சார்ந்த இதர கிராமப்புறத் தொழில்கள்.

ஒவ்வொரு காலத்திற்கு ஏற்பவும், இடம், தொழில் தகுதி, ஆற்றல் ஆகியவற்றைச் சார்ந்தும், நிதி ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டும் விவசாயத்தையே முழுவதுமாக நம்பி இருக்காமல், இதர பணிகளான கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, மீன் பண்ணை, தேனீ வார்ப்பு ஆகிய தொழில்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த பெருமளவு உதவுகின்றன.

கால்நடை வளர்ப்புக் கடன் திட்டம்

கால்நடை வளர்ப்புக்காக இரண்டு விதமான முதலீடுகள் தேவை. ஒன்று நிரந்தர முதலீடு, மற்றொன்று செயல்பாட்டு மூலதனம். கால்நடை வளர்ப்புக்கு தேவைக்கேற்ப கடன் திட்டங்கள் வங்கிகளில் உள்ளன.

தனிநபர் கடனாகவோ அல்லது ஒருவருக்கு மேல் இணைந்து கூட்டுப் பொறுப்புக் கடனாகவோ கறவை மாடுகள் வங்கிக் கடனில் வாங்கி பால் வணிகம் செய்யலாம். மாட்டுக் கொட்டகை அல்லது ஆட்டுக் கொட்டகை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ ஏற்று அமைத்துச் செயல்படலாம். அதற்கு இரண்டு ஆண்டுகள் அதே இடத்தில் குடியிருந்திருக்க வேண்டும். கால்நடை வளர்ப்பு, பராமரிப்பில் ஒரு ஆண்டு அனுபவம் அவசியம். அதற்கான கடன் பெறும் போது அனுபவத்தை நிரூபிக்க பால் வணிகம் மேற்கொண்டதற்கான சான்று மற்றும் கணக்கு அறிக்கை சொசைட்டியில் இருந்து பெற்றுத் தரலாம். ரூ.2 லட்சத்திற்குமேல் கடன் பெறுவதாக இருந்தால், இன்னொருவரின் பொறுப்புறுதி அவசியம். கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் ஐந்து ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்

*விண்ணப்ப படிவம்
*இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள்.
*ஓட்டுநர் உரிமம்/ ஆதார் அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை/ பாஸ்போர்ட் ஏதாவது ஒரு அடையாளச் சான்று.
*தகுதிவாய்ந்த அதிகாரிகளால் முறையாக சான்றளிக்கப்பட்ட நிலம் / கொட்டகை போன்றவற்றை சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுத்ததற்கான சான்று.
*கால்நடை வளர்ப்பில் அனுபவம் உள்ளதற்கான உறுதிச் சான்று.
*வங்கி நிர்ணயித்துள்ள வேறு ஆவணங்கள் – வங்கியின் அட்டவணைப்படி.

வட்டி / கட்டணங்கள்

வட்டி மற்றும் கட்டணம் அரசு மற்றும் இந்திய ரிசெர்வ் வங்கி ஆகியவற்றின் கட்டளைக்கு ஏற்ப மாறுபடும். ரூ.2. லட்சம் வரையிலான கடனுக்கான வட்டி விகிதம் ஒரு வருடத்திற்கு 7 %. இதற்கு அரசு 3% மானியம் வழங்குகிறது. அவ்வாறு மானியம் கிடைக்கும் கணக்குகளில் 4% மட்டுமே வட்டியாக வங்கியால் வசூலிக்கப்படுகிறது. அதாவது ரூ.100க்கு ஒரு மாதத்திற்கு 33 பைசா வட்டி. குறைந்த வட்டியை வங்கிகள் நிர்ணயித்து கடன் வழங்குவதால் விவசாயிகள் / தொழில் முனைவோர் தனிநபர்களிடமிருந்து அதிக வட்டியில் கடன் பெற்று அவதிப்பட தேவையில்லை.

செயலாக்க கட்டணம்

கடன்தொகை ரூ.50000/- வரை செயலாக்க கட்டணம் கிடையாது. கடன்தொகை ரூ.1.50 லட்சம் வரை ரூ.200/- என்றும் அதற்கு மேல் பெறப்படும் கடனுக்கு ரூ.250/- செயலாக்க கட்டணம் என்றும் வங்கியால் வசூலிக்கப்படுகிறது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் திட்டத்தினை வங்கிகள் செயல்படுத்துகின்றன. ஒரு கறவை மாட்டிற்கு ரூ.14,000 வீதம் இரண்டு கறவை மாடுகளுக்கு ரூ.28,000 வரையும், 10 கறவை மாடுகள் வரை வாங்கி வளர்க்கலாம். கால்நடை தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்குக் கடன் அட்டையை பயன்படுத்தலாம். இதன் மூலம் ஒரு மாதத்தில் வாங்கிய கடனை அதே மாதமே திரும்பிச் செலுத்தினால் வட்டி கணக்கிடப்படமாட்டாது.

கடன் தொகை ஒரு மாதத்திற்கு மேல் நிலுவையில் இருந்தால் 4% வட்டியும், மூன்று மாதங்களுக்கு மேல் என்றால், 10% வட்டியும் நிலுவைத் தொகையின்மேல் கணக்கிடப்படும். இந்த திட்டத்தின் நோக்கம் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தனி நபர்களிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்குவதை தவிர்ப்பதே ஆகும். ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், இரண்டு புகைப்படங்கள், நிலப் பட்டா ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அரசு அங்கீகரித்த கால்நடை மருத்துவரின் சான்று ஒவ்வொரு மாட்டினையும் பரிசோதித்துப் பெறவேண்டும்.

மீன் வளர்ப்புக் கடன் திட்டம்

வங்கிகள் நன்னீர் மீன் வளர்ப்பு, உவர்நீர் இறால் / மீன் / நண்டு வளர்ப்பு, இதர மீன் வளர்ப்பு, மீன்பிடித்தல், மீன் வணிகம் ஆகியவற்றுக்கு கடன் வழங்குகின்றன. உள்நாட்டு மீன்பிடிப்பு மற்றும் கடல் மீன் பிடிப்பு ஆகியவற்றிற்கு சிறப்பு சலுகைகளுடன் வங்கி கடன் வழங்குகிறது. மீன் வளர்ப்பிற்கு ஒரு ஏக்கருக்கு என்ற அளவீட்டில் கடன்தொகை நிர்ணயிக்கப்படும். மாவட்ட அளவிலான அரசின் தொழில்நுட்பக் குழுவால் இடம் மற்றும் பருவ காலநிலைக்கேற்பவும் கடன்தொகை நிர்ணயமாகும்.

மீனவர்கள், மீன் விவசாயிகள், சுய உதவி குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள் மற்றும் பெண்கள் குழுக்கள் ஆகிய எவரும் மீன் வளர்ப்புத்தொழிலில் ஈடுபட்டு வங்கியில் விண்ணப்பித்துக் கடன் பெறலாம். குளம், தொட்டி, திறந்த நீர்நிலைகள், பந்தயப் பாதை, குஞ்சு பொரிப்பகம், வளர்ப்பு அலகு போன்ற மீன்வளம் தொடர்பான செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை பயனாளிகள் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுத்து நடத்தவேண்டும். மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்கு தேவையான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அந்தந்த மாநில அரசின் நடைமுறை கட்டளைகளின்படி தொழில் அனுமதி செயல்பாட்டில் இருக்கவேண்டும். மேலே பட்டியலிடப்பட்டுள்ள பயனாளிகள், பதிவு செய்யப்பட்ட மீன்பிடிக் கப்பல் வைத்திருப்பவர்கள், குத்தகைக்கு எடுத்தவர்கள், கழிமுகம் மற்றும் கடலில் மீன்பிடிப்பதற்குத் தேவையான மீன்பிடி உரிமம் பெற்றவர்கள், கரையோரங்கள் மற்றும் திறந்த கடலில் மீன் வளர்ப்பு / கடல்சார் நடவடிக்கைகள் மேற்கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கடன் பெற்று செலுத்தத் தவறியவர்கள் மீண்டும் வங்கியின் மூலம் கடன் பெறுவது கடினமாகும்.

தேவையான ஆவணங்கள்

*விண்ணப்ப படிவம்

*இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.

*ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம்/ வாக்காளர் அடையாள அட்டை – ஏதாவது ஒரு அடையாளம் மற்றும் முகவரிச் சான்று.

*தகுதிவாய்ந்த அதிகாரிகளால் முறையாக சான்றளிக்கப்பட்ட மீன்பிடி கப்பல், படகு, பத்தை ஆகிய ஏதாவது ஒன்றை சொந்தமாக வைத்திருப்பதற்கு அல்லது குத்தகைக்கு எடுத்ததற்கான சான்று.

*மீன் / இறால் வளர்ப்பு ஆகியவற்றில் அனுபவம் உள்ளதற்கான உறுதிச் சான்று.

*வங்கி நிர்ணயித்துள்ள வேறு ஆவணங்கள் – வங்கியின் அட்டவணைப்படி.

கட்டணம்

*வங்கி நிர்ணயிக்கும் வட்டி மற்றும் கட்டணம் அரசு மற்றும் இந்திய ரிசெர்வ் வங்கி ஆகியவற்றின் கட்டளைக்கு ஏற்ப அவ்வப்போது மாறுபடும். ரூ.2 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 7%. இத்தகைய கடன்களுக்கான அரசு 3% வட்டி மானியம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வழங்குகிறது. அவ்வாறு மானியம் கிடைக்கும் கணக்குகளில் 4% வட்டி வங்கி வசூலிக்கிறது. அதாவது ரூ.100க்கு ஒரு மாதத்திற்கு 33 பைசா வட்டி.

செயலாக்க கட்டணம்

கடன்தொகை ரூ.50000/- வரை செயலாக்க கட்டணம் கிடையாது. ரூ.1.50 லட்சம் வரை ரூ.200/- என்றும் அதற்குமேல் பெறப்படும் கடனுக்கு ரூ.250/- செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கேட்புக்கடன்

விவசாய சார்பு தொழில்களுக்கான பிரதமமந்திரியின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிகள் கடன் வழங்குகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வேலை வாய்ப்பை உருவாக்கி வாழ்வாதாரத்திற்கான வருமானத்தை உருவாக்குவதற்கு கேட்புக்கடனாக வங்கியிலிருந்து பெறலாம். ஆண்டுதோறும் தொழில் வளர்ச்சி, லாபமீட்டும் நிலை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு கடன் தொகையில் சேர்ந்துள்ள வட்டியை மட்டும் செலுத்தி கடனை புதுப்பித்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக 60 மாதங்களுக்கு இந்த கடன் வசதி வழங்கப்படுகிறது. திட்டச் செலவு ரூ.50000/- வரை என்றால் விண்ணப்பதாரர் முழு தொகையையும் வங்கியில் கடனாகப் பெறலாம்.

விளிம்புத்தொகை கட்டவேண்டிய தேவையில்லை. திட்டச்செலவு ரூ.50000/- மேல் மற்றும் ரூ.10 லட்சம் வரை என்றால் விண்ணப்பதாரர் விளிம்புத்தொகையாக திட்டச் செலவில் 10% தனது சொந்த முதலீடாகத் தொழிலில் செலுத்தவேண்டும். இந்தத் திட்டத்தில் அரசு வட்டி மானியம் வழங்காது. அதே நேரத்தில் ரூ.10 லட்சம் வரை கடனுக்கு எந்த வித சொத்து அடமானமோ. பிணையமோ கிடையாது. கடன் அளவு ரூ.50000/- வரை செயலாக்கக் கட்டணம் கிடையாது. ரூ. 50000/- திற்கு மேல் அதிகபட்ச கடன் அளவு ரூ.10 லட்சம் வரை என்றால் செயலாக்கக் கட்டணம் 0.35% + GST. வங்கியில் விண்ணப்பிக்கும்பொது பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் வரையறையின்படி விண்ணப்பித்தால் மட்டுமே மேற்குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும்

தேவையான ஆவணங்கள்

*விண்ணப்பப் படிவத்தை முறையாக நிரப்பவும்
*அடையாளச் சான்று – வாக்காளர் அடையாள அட்டை/பான் அட்டை/பாஸ்போர்ட்/ ஆதார் அட்டை/ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று.
*வங்கி வரையறுத்துள்ள வேறு ஏதேனும் ஆவணம்.
*வட்டி விகிதம்: ஒரு வருட நிதிகளின் விளிம்புச் செலவு அடிப்படையிலான கடன் விகிதம் +2.75%(Marginal Cost of Funds based Lending Rate – MCLR +2.75%)

ஆடு வளர்ப்புக் கடன் திட்டம்

ஆட்டு இறைச்சிக்கு பெருமளவு சந்தை இருப்பதால் முதலீட்டுக்கான லாபம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகமாகும். ஆடுகள் ஆண்டு முழுவதும் பால், இறைச்சி மற்றும் உரம் வழங்குகின்றன. கிராமப்புற மக்களின் வருமான வளர்ச்சிக்கு உதவ ஆடு வளர்ப்பு யோஜனா 2022 திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் செம்மறி ஆடுகள் வாங்கி வளர்ப்பதற்கு ரூ.4 லட்சம் வரை கடன் கிடைக்கும். ஆடு வளர்ப்பிற்கு ஒரு யூனிட்டிற்கு ரூ.18000/- கடனாக வங்கிகள் வழங்குகின்றன.

ஆடுகள் வாங்கவும், அவற்றுக்கான கொட்டகைகள் அமைக்கவும், இதர உபகரணங்கள் மற்றும் நடைமுறைச் செலவுகளுக்காக வங்கிக்கடன் கிடைக்கும். 18 வயது முதல் 50 வயது வரையுள்ளவர்கள் ஆடுகள் வாங்கி வளர்ப்பதற்காக விண்ணப்பத்துடன் குடியிருப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், நில உரிமைச் சான்றிதழ், வங்கிக் கணக்கு அறிக்கை அல்லது கையேடு, வருமானச் சான்றிதழ், வருமான வரி கணக்கு எண் அட்டை, புகைப்படம் ஆகியவற்றை இணைத்து வங்கியில் வழங்கவேண்டும். ஆடு வளர்ப்புக் கடனுக்கு விண்ணப்பிக்குமுன் அதற்குரிய முழு விவர திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். ஒரு ஆட்டுக்கு 12 சதுர அடி நிலமும், 20 ஆடுகளுக்கு 240 சதுர அடி நிலமும் தேவை. இவை அனைத்தும் திட்ட அறிக்கையில் இடம் பெற வேண்டும்.

எந்த திட்டத்தின் மூலம் கடன் பெற முனைந்தாலும் முதலில் விண்ணப்பதாரர் செய்யவேண்டியது தொழிலுக்கான திட்ட அறிக்கை தயாரிப்பதேயாகும். தொழிலின் விவரங்கள், அனுபவம், தேவையான நிதிக் கணக்கீடு, சந்தை வாய்ப்புகள், எதிர்பார்க்கும் ஆண்டு வணிகம், லாபம், தனிநபர் அடையாளம், இருப்பிட விவரம் ஆகிய அனைத்தும் உள்ளடக்கியதாக திட்ட அறிக்கை தயாரித்து வழங்குவது வங்கியின் பரிசீலனைக்கு உறுதுணையாக இருக்கும்.

தொகுப்பு : எஸ்.விஜயகிருஷ்ணன்

The post வாழ்க்கை + வங்கி = வளம் appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Life ,Bank ,Dinakaran ,
× RELATED தொழில் துவங்க தொடர் சோதனை அவசியம்!