×

தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி 13 கோடி ரூபாய் மோசடி: பாதிக்கப்பட்ட மக்கள் மறியல்

 

 

தண்டையார்பேட்டை: சென்னை கொருக்குப்பேட்டை கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் ஏ.ஆர்.மோட்டார்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்திவந்தவர் பாலமுருகன் (40). இவர் தீபாவளி பண்ட் சீட்டும் பிடித்துள்ளார். இவரிடம் 300க்கும் மேற்பட்டவர்கள் தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். ஆனால் பணம் கட்டி முடித்தவர்களுக்கும் பணம் கொடுக்காமல் ஏமாற்றிவந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று கேட்டபோது பணத்தை திருப்பி தராமல் பாலமுருகன் தலைமறைவாகி விட்டார். மேலும் பாலமுருகனுக்கு ஆதரவாக அமமுக பிரமுகர் மைனர் விக்னேஷ், அதிமுக பிரமுகர் பிரகாஷ் என்கின்ற விஜி ஆகியோர் செயல்பட்டதாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுசம்பந்தமாக மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் புகார் கொடுத்தனர்.

இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை கொருக்குப்பேட்டை- கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பாலமுருகன் அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் ஆய்வாளர் ரவி தலைமையில் போலீசார் வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, ‘’பாலமுருகன் தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி 13 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றியுள்ளார். அவர் மீது புகார் கொடுத்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு ஆதரவாக அதிமுக பிரமுகர், அமமுக பிரமுகர் ஆகியோர் செயல்படுகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி 13 கோடி ரூபாய் மோசடி: பாதிக்கப்பட்ட மக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Diwali bunt ,Kandadarpet ,Chennai ,Korkuppet Kurivakam Highway ,R.R. Balamurugan ,Motors ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...