×

நடிப்பு என் ரத்தத்தில் கலந்திருக்கு! ‘இலக்கியா’ புகழ் ஹிமா பிந்து

நன்றி குங்குமம் தோழி

‘‘எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க முடியாத உறவு என்றால் அது நட்புதான். நாம என்ன செய்தாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும், நண்பர்கள் மட்டும்தான் நம் மேல் நம்பிக்கை வைப்பாங்க. நாம தப்பு செய்தால் தண்டிக்கவும், நல்லது செய்தால் பாராட்டும் குணம் நண்பர்களுக்கு மட்டும்தான் உண்டு. அப்படிப்பட்ட உறவை நான் என்னைக்குமே பிரியக்கூடாதுன்னு நினைப்பேன்’’ என்கிறார் இலக்கியா தொடரின் நாயகி ஹிமா பிந்து.

‘‘நான் பிறந்தது எல்லாம் ஆந்திராவில் உள்ள பீமாவரம்தான். அம்மா, அப்பா இரண்டு பேரும் சென்னையில் வேலைப் பார்த்து வந்தாங்க. அதனால் நான் பீமாவரத்தில் பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன். அம்மாவுக்கு 3 தம்பிங்க. நான் மாமாங்களோட செல்லம். ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க. அவ்வளவு பாசமா இருப்பாங்க. எனக்கு மூணு வயசு இருக்கும் போது, அம்மா, அப்பா இரண்டு பேரும் சென்னையிலேயே செட்டிலாயிடலாம்னு முடிவு செய்திட்டாங்க. அதனால் நானும் அவங்களுடன் சென்னைக்கு போயிட்டேன். ஆனால் அதன் பிறகு அம்மாவும் வேலைக்கு போகணும். மேலும் பாட்டிக்கும் உடம்பு சரியில்லாமல் போயிடுச்சு. அதனால அவங்களாலும் என்னைப் பார்த்துக்க முடியாத நிலை.

அதனால் அம்மா என்னை ஹாஸ்டலில் சேர்த்துட்டாங்க. பத்தாம் வகுப்பு வரை அங்கு தான் படிச்சேன். நான் நல்லா படிப்பேன். ஆளுமை தன்மையுடன் இருக்கணும்ன்னு நினைப்பேன். அதன் பிறகு +1, +2 சென்னையில் படிச்சேன். கல்லூரியில் பி.காம் முடிச்சிட்டு ஒரு வருஷம் ஃபேஷன் டிசைனிங்கும் படிச்சேன்’’ என்றவர் சின்னத்திரையில் கால் பதித்தது பற்றிக் குறிப்பிட்டார். ‘‘எனக்கு சினிமாவில் நடிக்கணும்னு விருப்பம். காரணம், என் அப்பா மற்றும் அவர் குடும்பத்தினர் எல்லாரும் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க.

அதனால எனக்கும் நடிப்பு மேல தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் எங்க வீட்டில் எல்லாருக்கும் சினிமா பற்றித் தெரியும் என்பதால், எனக்கு அந்த வாசமே வேண்டாம்னு நினைச்சு நல்லா படிக்க வைச்சாங்க. நானும் படிச்சேன். ஆனால் மனசில் ஒரு ஓரத்தில் நடிக்கணும்னு ஆர்வம் மட்டும் இருந்தது. அதனால் வாய்ப்பு வந்தா நடிக்கலாம்னு இருந்தேன். அந்த சமயத்தில்தான் எங்க உறவினர் ஒருவர் மூலமாக குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

அந்த டீமில் இருந்தவங்க எல்லாரும் இன்றைய தலைமுறையை சேர்ந்தவங்க. அவங்க தங்கச்சி மாதிரி பார்த்துக்கிட்டாங்க. எனக்கு நடிப்பு பற்றி ஏதும் தெரியாது என்பதால், அவங்க தான் எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. நான் நடிப்பு குறித்து பல விஷயங்களை அவங்க மூலமா தெரிஞ்சிக்கிட்டேன். ஆனால் அந்தப் படம் தாமதமாக ரிலீசானாலும், எனக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் பிறகு முழு மூச்சா சினிமாவில் வாய்ப்பு தேடிய போது தான், இதில் பல விஷயங்கள் அடங்கி இருக்கு. அது எல்லாம் எனக்கு சரியாக வரும்னு தோணல. வீட்டிலும் நல்ல வாய்ப்பு கிடைச்சா செய்யலாம்னு சொல்லிட்டாங்க.

ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கும் சினிமாவில் வாய்ப்பு வரும்ன்னு நம்பிக்கை இல்லாமல் போயிடுச்சு. சினிமா ஒரு கடல். அதில் நீந்தி முத்தெடுப்பது அவ்வளவு சுலபமில்லை. ஷூட்டிங் முடிந்தாலும், அதை வெளியிடணும். அடுத்து மக்கள் ஏற்றுக் கொள்ளணும். படம் ஹிட்டானாலும் அடுத்த படத்திற்கான வாய்ப்பு கிடைக்கணும். அது எனக்கானது இல்லைன்னு தோணுச்சு. அப்பதான் நான் ஏற்கனவே நடிச்ச படத்தைப் பார்த்து பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.

முதலில் நான் சம்மதிக்கவில்லை. அப்போது அந்த தொடரில் தயாரிப்பாளர் குஷ்மாவதிதான் என்னை நடிக்க சொல்லி ஊக்குவிச்சாங்க. எனக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்தாங்க. அவங்களோட சொந்த தங்கச்சி போல பார்த்துக்கிட்டாங்க. அந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைச்சது. அதனைத் தொடர்ந்து தான் எனக்கு சன் டிவியில் இலக்கியா தொடரில் நடிக்கும் வாய்ப்பு வந்தது’’ என்றவர் தன் குழந்தைப் பருவ நட்புகளைப் பற்றி விவரித்தார்.

‘‘எதுவும் புரியாத தெரியாத வயசில் நாம் எல்லாரும் ரொம்பவே சாந்தமா இருப்போம். நானும் அப்படித்தான் இருப்பேன். என்னுடைய மூன்றாம் வகுப்பில் நான் ஹாஸ்டலில் சேர்ந்தேன். சின்ன வயசில் நான் ரொம்ப அடம் பிடிப்பேன். யாராவது கிண்டல் செய்தா அழுதிடுவேன். ஆனால் படிப்பில் நான் ரொம்ப சுட்டி. யாரு முதல் மார்க் வாங்கணும்ன்னு நண்பர்களுக்கு இடையே போட்டிப் போட்டுக் கொண்டு படிப்போம். ஹாஸ்டல் பொறுத்தவரை விடுமுறை நாட்கள் மிகவும் குறைவு.

எப்பவாவது இரண்டு நாள் விடுமுறை கிடைக்கும். அந்த சமயத்தில் அம்மாவால் என்னை அழைத்துப் போக முடியாது. அதனால் நான் மட்டுமே அந்த மொத்த ஹாஸ்டலில் தனியா சுத்திக் கொண்டு இருப்பேன். அந்த நேரத்தில் என் ஃபிரண்ட்ஸ் என் கூடவே இருப்பாங்க. என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் அதே ஊர் என்பதால் அவங்க வீட்டில் இருந்து தான் பள்ளிக்கு வருவாங்க. நான் தான் ஹாஸ்டலில் இருப்பேன்.

அதனால் விடுமுறை நாட்களில் அவங்க வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போயிடுவாங்க. பானு, சரண், சுபாஷ், ஸ்ரேஷிதா, ரிஷிகா, பவித்ரா என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட்ஸ். இதில் எனக்கும் பவித்ராவுக்கும் நெருக்கம் அதிகம். இப்பவும் பவித்ரா என்னைப் பார்க்க சென்னைக்கு வருவா. அவ ஃபிரண்ட் என்பதைத் தாண்டி என் கூடப்பிறந்த சகோதரின்னு தான் சொல்லணும். நாங்க சந்திச்சுகிட்டா அந்த ஒரு நாள் சந்தித்துக் கொண்டாலும் அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.

சேஷ்ரிதா, அவ என்னை விட நல்லா படிப்பா. எனக்கு புரியாத பாடங்களை சொல்லித் தருவா. அவங்க அம்மா பெயரும் என் அம்மா பெயர்தான் மாதுரி. என்னை அவங்க பொண்ணு போல பார்த்துப்பாங்க. சில சமயம் பிடிக்காத வகுப்பில் நான் தூங்கிடுவேன். அப்ப அவ டீச்சரிடம் எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி காப்பாத்துவா. நான் தூங்கி எழுந்த பிறகு அந்த பாடத்தை சொல்லித் தருவா. அப்புறம் எனக்கு பிடிச்ச சாப்பாட்டை அவங்க அம்மா எனக்காக செய்து கொடுப்பாங்க.

ரிஷிகா, அவ அம்மாவும் ரொம்ப லவ்லியானவங்க. நானும் அவளும் கிளாசிக்கல் நடனம் கத்துக்கிட்டோம். அவளும் டான்ஸ் நல்லா ஆடுவா. அவங்க அம்மாவும் எனக்கு ஏதாவது செய்து கொடுத்து அனுப்புவாங்க. அப்படிக் கொண்டு வரும் போது எனக்கு சாப்பிட கொடுத்திட்டுதான் அவ சாப்பிடுவா. பள்ளியில் ஆண்டு விழா நடைபெறும். என் அம்மாவால வர முடியாது. அவ அம்மா தான் எனக்கு மேக்கப், டிரஸ் எல்லாம் பார்த்து பார்த்து செய்வாங்க. அவ கல்யாணத்திற்கு நண்பர்கள் வட்டத்தில் என்னை மட்டும்தான் கூப்பிட்டா.

அவ்வளவு பாசம் அவளுக்கு என் மேல.கல்லூரியில் ஷமா, தேஜா, சந்தியா, விஷாலி. நாங்க கடைசி பெஞ்ச் அட்ராசிட்டிஸ். எங்களில் யாருக்காவது பிரச்னைன்னா எல்லாரும் சேர்ந்து அதற்கான தீர்வு என்னென்னு பார்ப்போம்.. நான் கல்லூரியில் கல்ச்சுரல் செக்ரட்டரி பதவிக்காக போட்டியிட்டேன். அதில் நான் ஜெயிக்க இவங்க தான் முழு பிரச்சாரம் செய்தாங்க. நான் தவறான வழியில் போறேன்னு தெரிஞ்சா உடனே எனக்கு அறிவுரை சொல்வாங்க.

எனக்கு எது சரி கெட்டதுன்னு பார்த்து பார்த்து செய்வாங்க. இப்ப எல்லாரும் வேலை, குடும்பம்னு செட்டிலாயிட்டாங்க. அதனால ரெகுலரா பார்த்துக் கொள்வதில்லைன்னாலும் என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் கேள்விப்பட்டு எனக்கு போன் செய்து பாராட்டுவாங்க. நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க. கல்லூரியில் என்னுடைய ஜூனியர் பிரியா. அவ எப்போதும் என் கூடவே இருப்பா. இப்ப கல்லூரியில் கான்டாக்டில் இருக்கும் ஒரே ஃபிரண்ட் இவதான். எனக்கு ஷூட்டிங் இல்லாத நாட்களில் அவகூடத்தான் இருப்பேன்.

எனக்கு நிறைய சர்ப்பிரைஸ் செய்வா. நான் எப்போதும் சந்தோஷமா இருக்கணும்னு விரும்புவா. இப்பகூட என்னுடைய பிறந்தநாளுக்கு கேக் எல்லாம் வாங்கி எனக்கு சர்ப்பிரைஸ் கொடுக்க எனக்காக வீட்டில் காத்திருந்தா. ஆனா, ஷூட்டிங் முடிச்சு வர லேட்டாயிடுச்சு. அவ கிளம்பிட்டா. அவள சந்தோஷப்படுத்த கேக் கட் செய்து அதை என்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்தேன். அவள மறுபடியும் எப்ப பார்ப்போம்ன்னு எனக்கு தெரியல. ஆனா கண்டிப்பா அவளுடைய பர்த்டேவை அவளுடன் சேர்ந்து கொண்டாடுவேன்’’ என்றவர் சின்னத்திரையில் உள்ள உறவுகள் குறித்து பகிர்ந்தார்.

‘‘சீரியல் வாழ்க்கை வேற. நிஜ வாழ்க்கை வேற. இது வேலை செய்யும் இடம். இங்க இருப்பவங்க எல்லாரும் புரொபஷனலிஸ்ட். அவங்ககிட்ட பள்ளி, கல்லூரி நண்பர்கள் போல விளையாட முடியாது. படிக்கும் இடத்தில் எல்லாரும் ஒரே வயதில் இருப்பாங்க. ஆனால் இங்க அப்படி இல்லை. பல வயதினர் இருப்பாங்க. எல்லாரும் வெவ்வேறு எண்ணத்தில் இருப்பாங்க. அதனால அவங்களின் மனநிலை பொறுத்துதான் நான் பழகுவேன். இதயத்தை திருடாதே தான் என்னுடைய முதல் சீரியல். அப்ப நான் ரொம்ப சின்ன பொண்ணு என்பதால் செட்டில் உள்ள அனைவரும் ரொம்ப பாசமா பார்த்துக்கிட்டாங்க. இன்றும் அந்த குழுவில் உள்ளவங்க எனக்கு போன் செய்து பேசுவாங்க.

அங்கு தான் எனக்கு ரியாவின் நட்பு கிடைச்சது. ஆரம்பத்தில் நானும் அவளும் பேசிக்க மாட்டோம். சொல்லப்போனா அவளும் நானும் இரட்டையர்கள்னு சொல்லலாம். ஒரே மாதிரிதான் செயல்படுவோம். அது தான் எங்களுக்குள் நட்பு என்ற பாலத்தை உருவாக்கியதுன்னு சொல்லணும். இலக்கியா பொறுத்தவரை ஷர்ஷா, ஹீரோ ரோலில் நடிக்கும் நந்தன், சுஷ்மா, ராணி, அத்தை மற்றும் மாமா கதாபாத்திரத்தில் நடிக்கிறவங்க எல்லாரும் சீரியலில் பார்க்கும் போது தான் டெரரா இருப்பாங்க. நிஜத்தில் எல்லாருக்கும் குழந்தை மனசு.

இந்த தொடர் ஆரம்பிச்சு ஒரு 200 எபிசோட்தான் முடிந்திருக்கும். இது முடிந்த பிறகுதான் வேறு தொடர் பற்றி யோசிக்கணும். இப்ப ஒரு வெப் சீரீசில் நடிக்கிறேன். அதன் ஷூட்டிங் ஐதராபாத் என்பதால், இங்கே சில நாட்கள் அங்க சில நாட்கள்னு பறந்து கொண்டு இருக்கேன். சினிமா பொறுத்தவரை வாய்ப்பு வந்தா கண்டிப்பா செய்வேன்’’ என்றார் ஹிமா பிந்து.

தொகுப்பு : ப்ரியா

The post நடிப்பு என் ரத்தத்தில் கலந்திருக்கு! ‘இலக்கியா’ புகழ் ஹிமா பிந்து appeared first on Dinakaran.

Tags : Hima Bindu ,kumkum ,
× RELATED குதிகால் வலி