×

காயிதே மில்லத்தின் 128வது பிறந்தநாள்: திருவல்லிக்கேணியில் உள்ள நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: காயிதே மில்லத்தின் 128வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 1896ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி பிறந்த காயிதே மில்லத்தின் 128வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 3 முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், முஸ்லீம் லீக் கட்சியின் நீண்டகால தலைவருமான இருந்த காயிதே மில்லத்தை நினைவுகூரும் விதமாக சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், செஞ்சி மஸ்தான், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோரும் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மத நல்லிணக்கத்துக்காகத் தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர் காயிதே மில்லத். முக்கியமாக மத பதற்றம் விளைவிக்க கூடிய தருணங்கள் உருவாகும்போது, யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசி பிரச்சினைக்கு ஆரம்பத்திலேயே சுமுகத் தீர்வு கண்டுவிடுவார். அப்படி பிரச்சினைகளை தீர்த்து வைத்தது பற்றி விளம்பரப்படுத்தி கொள்ளவும் மாட்டார். சிறு விஷயங்களை பெரிதுபடுத்தி, பதற்றத்தை நீட்டிக்கும் வகையில் அவர் செயல்பட்டதே இல்லை.

இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்தவர். இஸ்லாம் என் மதம்; தமிழ் என் தாய் மொழி என்று பிரகடனப்படுத்தியவர். தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழி, மத நல்லிணக்கம், சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சி என தமிழ் சமூகத்துக்கும், இந்திய சிறுபான்மையினருக்கும் மிக முக்கிய பங்காக காயிதே மில்லத் திகழ்ந்திருந்தார். மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் பங்குகொண்டு இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காயிதே மில்லத்தின் 128வது பிறந்தநாள்: திருவல்லிக்கேணியில் உள்ள நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Kaithe Millam ,Chief Minister ,M.K.Stalin ,Tiruvallikeni ,Chennai ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...