×

வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நாளை முதல் பருத்தி பஞ்சு ஏலம் துவக்கம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் நாளை முதல் பருத்தி பஞ்சு ஏலம் துவங்கவுள்ளதாக விற்பனை கூட செயலாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து நீரானது உரிய முறையில் கிடைத்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் விவசாயிகள் 3 போக நெல் சாகுபடி மேற்கொண்டு வந்தனர். அதன்பின்னர் மேட்டூர் அணையிலிருந்து உரிய நீர் கிடைக்காது மற்றும் பருவமழை பொய்த்துப் போவது போன்ற காரணங்களினால் 3 போகம் என்பது 2 போகமாக மாறி அதன் பின்னர் ஒருபோக சாகுபடியாக மாறியது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ந் தேதி திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மேட்டூர் அணையானது ஜுன் 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் கடந்தாண்டு வரலாற்றில் இல்லாத வகையில் மே மாதம் 24ந் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இவ்வாறு கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்திலும், வரலாற்றில் இல்லாத வகையில் முன்கூட்டியும் திறக்கப்பட்டதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட கூடுதலான அளவில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமான குறுவை சாகுபடி பரப்பான 97 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலாக 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு என மொத்தம் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ஏக்கரில் கடந்த 2 ஆண்டு காலமாக சாகுபடி நடைபெற்று வருகிறது. அதேபோல் சம்பா சாகுபடியும் மாவட்டத்தில் 2 ஆண்டு காலமாக 3 லட்சத்து 72 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்று வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறியுள்ளனர். அதன்படி நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 15 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே பருத்தி பயிரை விவசாயிகள் சாகுபடி செய்து வரும் நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக நடப்பாண்டில் இந்த பருத்தி பயிர் 41 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை மழை காரணமாக இந்த பருத்தி பயிர்கள் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் வேளாண் அலுவலர்களின் பரிந்துரைபடி பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பருத்தி பயிரை காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில் இந்த பருத்தி பஞ்சுகள் அனைத்தும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக வியாபாரிகளை கொண்டு ஏல முறையில் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்தாண்டில் அதற்கு முன்னதாக இல்லாத வகையில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ 12 ஆயிரம் வரையில் விலை கிடைத்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த பருத்தி பயிரானது ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயாராகி வருவதையடுத்து அதிலிருந்து பருத்தி பஞ்சுகளை எடுக்கும் பணியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் நடப்பாண்டில் இந்த பருத்தி பஞ்சு ஏலமானது வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நாளை (6ம் தேதி) முதல் துவங்கவுள்ளதாக ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் (பொ) ரமேஷ் தெரிவித்துள்ளார். அதன்படி, மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, குடவாசல், வலங்கைமான் மற்றும் பூந்தோட்டம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஏலம் நடைபெறவுள்ளதால் நல்ல விலை கிடைப்பதற்கு விவசாயிகள் தங்களது பருத்தி பஞ்சினை நங்கு காய வைத்து உரிய தரத்துடன் எடுத்து வந்து ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

 

The post வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நாளை முதல் பருத்தி பஞ்சு ஏலம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Agricultural Regulation Halls ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...