×

மகாராஷ்டிராவில் 7ம் தேதி நடக்கிறது அரபிக் கடலோரம் ரூ.100 கோடியில் பெருமாள் கோயில் கட்ட பூமிபூஜை

திருமலை: நாடு முழுவதும் இந்து தர்ம பிரச்சாரம் செய்யும் விதமாக வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஜம்மு முதல் கன்னியாகுமரி வரை கோயில் கட்டும் பணியில் தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரியில் கோயில் கட்டப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு மாநில அரசு மஜ்னு நகரில் 60 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு வழங்கிய நிலையில், அந்த இடத்தில் தேவஸ்தானம் சார்பில் ரூ.30 கோடி மதிப்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு வரும் 8ம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிராவில் நவி மும்பையில் அரபிக் கடலோரத்தில் அம்மாநில அரசு ரூ.600 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு கோயில் கட்ட வழங்கியுள்ளது. அந்த இடத்தில் ரூ.100 கோடி மதிப்பில் வெங்கடேஸ்வர பெருமாள் சுவாமி கோயில் கட்டுவதற்காக ரேமன்ஸ் குழுமத்தின் தலைவர் கவுதம் சிங்கானியா சம்மதம் தெரிவித்து உள்ளார். அதற்கான பூமி பூஜை வரும் 7ம் தேதி(நாளை மறுதினம்) நடைபெற உள்ளது. இதில், அம்மாநில முதல்வர் எக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பங்கேற்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார்.

 

The post மகாராஷ்டிராவில் 7ம் தேதி நடக்கிறது அரபிக் கடலோரம் ரூ.100 கோடியில் பெருமாள் கோயில் கட்ட பூமிபூஜை appeared first on Dinakaran.

Tags : Bhumi Puja ,Perumal ,Arabian sea coast ,Maharashtra ,Tirumala ,Venkateswara Swamy ,Temple ,Jammu ,Perumal temple ,
× RELATED பகவான் நாமத்தை எப்போது சொல்ல வேண்டும்?