×

தொடர்பு கொள்ள முடியாத 8 பேரை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் பேட்டி

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய 8 பேரை தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் நிருபர்களிடம் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் கூறியதாவது: ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களில் 70 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறி இருக்கின்றனர். அதன்படி, இறந்து அடையாளம் காணப்பட்டவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எவரும் இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.

மேலும், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் நபர்களது விபரங்களை இதுவரை பரிசீலனை செய்ததில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் காயமுற்று சிகிச்சை பெறவில்லை என்ற விவரமும் தெரியவந்துள்ளது.
ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளது பட்டியல் தென்னக ரயில்வேயிலிருந்து பெறப்பட்டு அதில் தமிழ்ப் பெயர் கொண்டவர்களையும், தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்துள்ள 127 நபர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 127 நபர்களை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து தொடர்பு கொள்ளப்பட்டதில், 119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது. எஞ்சிய 8 நபர்களது செல்பேசி மற்றும் முகவரி இல்லாத நிலையில் அவர்களை தொடர்புகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த 8 பேரின் முகவரிகளை ரயில்வே நிர்வாகத்திடம் வாங்கி அவர்களின் உறவினர்களை தொடர்பு கொண்டு பேச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒடிசாவில் முகாமிட்டுள்ள மீட்புக் குழுவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டு அறையும் இணைந்து, தொடர்பு கொள்ள இயலாத நபர்களுடைய விபரங்களை சேகரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புகொள்ள இயலாத நிலையில் உள்ள கீழ்கண்ட 8 நபர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்பு கொள்ள முடியாத நபர்கள் பட்டியல் நாரகணி கோபி (34), கார்த்திக்(19), ரகுநாத்(21), மீனா(66), எ. ஜெகதீசன்(47), கமல்(26), கல்பனா(19), அருண்(21). வருவாய்த்துறை உதவி எண்கள் கட்டணமில்லா தொலைபேசி – 1070, செல்பேசி – 9445869843

The post தொடர்பு கொள்ள முடியாத 8 பேரை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,K. K.K. S.S. S.S. ,R.R. Ramashandran ,Chennai ,Odisha ,K. K.K. S.S. S.S. R.R. Ramachandran ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...