×

கோவை கார் வெடிப்பு வழக்கு 5 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை

சென்னை: கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின்(28), என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை 11 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவான ஆவணங்கள், முக்கிய ஆதாரங்கள், லேப்டாப் உள்ளிட்டவைகளை போலீசார் கைப்பற்றினர். இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் பலமுறை காவலில் எடுத்து விசாரணை செய்து பல்வேறு தடயங்கள் மற்றும் ஆவணங்களை சேகரித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட உமர் பாரூக், பெரோஸ் கான், முகமது தவுபீக், ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய ஐந்து பேர் மீது தேசிய புலனாய்வு முகமை போலீசார் நேற்று பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கில் இறந்து போன ஜமேஷா முபீனை சேர்த்து ஏழு பேர் மீது தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வழக்கில் 11 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post கோவை கார் வெடிப்பு வழக்கு 5 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.

Tags : Cove ,Chennai ,Ugudam Fort Eswaran Temple ,Govai ,Dinakaran ,
× RELATED கோவை வன ஆராய்ச்சி மையத்தில் தொழில்நுட்ப உதவியாளர்