×

மருத்துவமனையில் இருக்கும் மனைவியை பார்க்க சிசோடியாவுக்கு இன்று ஒரு நாள் ஜாமீன்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனைவியை சந்திக்க டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று ஒரு நாள் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கடந்த பிப்ரவரி 26ம் தேதி கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா தற்போது வரையில் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பிரதான வழக்கில் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் குமார் சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘‘மணீஷ் சிசோடியாவின் மனைவி உடல்நலம் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இதனால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் அமலாக்கத்துறை தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘மருத்துவமனையில் இருக்கும் மனைவியை பார்க்க மணீஷ் சிசோடியாவுக்கு ஒரு நாள் அதாவது இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜாமீன் வழங்கப்படுகிறது. இருப்பினும் அவர் செல்போன் உள்ளிட்ட எந்த ஒரு மின்னணு பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. ஊடகங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர் ஆகியோரிடமும் பேசக்கூடாது என’’ உத்தரவிட்டார்.

The post மருத்துவமனையில் இருக்கும் மனைவியை பார்க்க சிசோடியாவுக்கு இன்று ஒரு நாள் ஜாமீன்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sisodia ,Delhi iCourt ,New Delhi ,Former ,Delhi ,Deputy Chief of ,Manish Sisodia ,Delhi High Court ,
× RELATED மாடி படி ஏறுங்க… தரையை சுத்தம்...