×

கர்நாடகா அறிவிப்பில் ஆதாரம் இருந்தால் மேகதாது விவகாரத்தில் சட்ட நடவடிக்கை பாயும்: காவிரி ஆணையம் அதிரடி

புதுடெல்லி: மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசின் அறிவிப்பு குறித்து அரசாணை ஆதாரம் இருக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உறுதியளித்துள்ளார். கர்நாடகாவில் மேகதாதுவில் ரூ.1000கோடி நிதி ஒதுக்கீடு செய்து கண்டிப்பாக அணை கட்டப்படும் என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், டெல்லியில் காவிரி ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தரை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை நேற்று கொடுத்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதில்,‘‘காவிரியில் கர்நாடக அரசு சட்டவிரோதமாக மேகதாது அணைக்கட்ட எடுக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் அறிவிப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நோக்கம் கொண்டது. எனவே ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவிரி நதி உள்ளிட்ட அணைகளின் நிர்வாகம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இதனை தடுத்து நிறுத்த ஆணையம் முன்வர வேண்டும் என தெரிவித்தேன். இதையடுத்து மனுவை பரிசீலித்த ஆணைய தலைவர், ‘‘கர்நாடக அரசின் அறிவிப்பு குறித்த அரசாணை ஆதாரங்கள் இருக்குமேயானால் சட்ட நடவடிக்கை எடுக்க ஆணையம் தயார் நிலையில் உள்ளது. ஆணையத்தின் அனுமதியில்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது என்று உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

The post கர்நாடகா அறிவிப்பில் ஆதாரம் இருந்தால் மேகதாது விவகாரத்தில் சட்ட நடவடிக்கை பாயும்: காவிரி ஆணையம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Caviri Commission Action ,New Delhi ,Karnataka government ,Dinakaran ,
× RELATED திருப்திபடுத்தும் அரசியலை எதிர்க்கட்சிகள் நாடுகின்றன: பாஜ விமர்சனம்