×

கூடுதல் பேக்கேஜை எடுத்து செல்ல அனுமதிக்காததால் ஆவேசத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது”: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு

மும்பை: மும்பை ஏர்போர்ட்டில், தனது கூடுதல் பேக்கேஜை எடுத்து செல்ல அதிகாரிகள் அனுமதிக்காததால் பெண் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தெற்கு மும்பையில் வசிக்கிறார். கடந்த மே 29ம் தேதி தனது தாயை சந்திப்பதற்காக கொல்கத்தா செல்வதற்காக, கையில் பேக்கேஜ் பெட்டிகளுடன் மும்பை சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தார். ஸ்பைஸ்ஜெட் பேக்கேஜ் செக்-இன் கவுண்டரை அடைந்ததும், அவர் போர்டிங் பாஸ் கேட்டார். செக்-இன் செய்வதற்காக தனது இரண்டு பைகளை கொடுத்தார். விமான போக்குவரத்து விதிகளின் உள்நாட்டு விமான பயணத்திற்கு ஒரு பையை அனுமதிக்கப்படும்.

அதுவும் அதிகபட்சமாக 15 கிலோ எடையுள்ள பொருட்களை மட்டுமே எடுத்து செல்லலாம். ஆனால் அந்த பெண் 22.05 கிலோ எடையுள்ள இரண்டு பைகளை கையில் வைத்திருந்தார். இரண்டு பைகளையும் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு அங்கிருந்தவர்கள், கூடுதல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினர். ஆனால் அந்தப் பெண் கூடுதல் பணம் செலுத்த மறுத்துவிட்டார். இவ்வாறு வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீரென தனது ஒரு பேக்கில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார். அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களையும், மோப்ப நாயையும் வரவழைத்தனர்.

அந்தப் பெண்ணையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஒட்டுமொத்த விமான நிலையமே பரபரப்பான நிலையில், அதிகாரிகள் அந்த பேக்கை சோதனையிட்டதில் அதில் வெடிகுண்டு போன்ற பொருட்கள் இல்லை என்பதும், மிரட்டலுக்காக அந்தப் பெண் வெடிகுண்டு புரளியை கிளப்பியதும் தெரியவந்தது. அதையடுத்து சிஐஎஸ்எப் அதிகாரிகள் அந்தப் பெண்ணை சஹார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்தப் பெண்ணை கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அன்று மாலை அந்தப் பெண் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து சிஐஎஸ்எப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கூறுகையில், ‘மற்றவர்களின் உயிருக்கு பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதற்காக அந்தப் ெபண் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிந்தைய நேரம் என்பதால், சட்ட நடைமுறையின்படி அவர் போலீஸ் காவலில் வைக்கப்படவில்லை. மறுநாள் காலை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் அங்கு ஜாமீன் பெற்றார். விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

 

The post கூடுதல் பேக்கேஜை எடுத்து செல்ல அனுமதிக்காததால் ஆவேசத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது”: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pandemonium ,Mumbai Airport ,Mumbai ,Dinakaran ,
× RELATED ரூ.11 கோடி போதை பொருளை விழுங்கிய...