×

காட்டூர், அம்மையப்பன் பகுதி முதியோர் இல்லங்கள் சரியாக செயல்படுகிறதா?

திருவாரூர், ஜூன் 2: திருவாரூர் மாவட்டம் கெராடாச்சேரி ஒன்றியம், காட்டூர் மற்றும் அம்மையப்பன் பகுதிகளிலுள்ள முதியோர் இல்லங்களை கலெக்டர் சாரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டம் கெராடாச்சேரி ஒன்றியம் காட்டூர் பகுதியிலுள்ள பாரதி முதியோர் இல்லத்தில் 21 முதியோர்களும், அம்மையப்பன் பகுதியிலுள்ள சேவாயோகா மாணவர் மற்றும் முதியோர் இல்லங்களில் 45 முதியோர்களும் மற்றும் 4 மாணவர்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த முதியோர் இல்லங்களை கலெக்டர் சாரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது பராமரிக்கப்பட்டு வரும் முதியோர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், உணவு, மருத்துவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் சமையல் கூடம், குளியலறை, முதியோர்களை பராமரித்து வருவது தொடர்பான பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

தொடர்ந்து, கொரடாச்சேரி ஒன்றியம், இலவங்கார்குடி ஊராட்சி பகுதியிலுள்ள அங்கான்வாடி மையத்தில்- 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு குறித்தும், குழந்தைகளின் உயரம், எடை குறித்து குழந்தைகளை பரிசோதிக்கும் முகாம் நடைபெறுவதை கலெக்டர் சாரு பார்வையிட்டார். மேலும் விளமல் வட்டார வள மையத்தில், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பதை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு தரமான, சுகாதாரத்துடனான உணவை தயாரித்து வழங்க வேண்டும் என கலெக்டர் சாரு பயிற்சிபெறும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தண்டலை ஊராட்சியிலுள்ள குழந்தைகள் மையத்தை பார்வையிட்டு குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கப்படும் சமையலறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் குறுங்காடுகள் அமைப்பதற்கு மரக்கன்றுகளை நட்டு கலெக்டர் சாரு தொடங்கி வைத்தார்.
இதில் ஆர்.டி.ஓ சங்கீதா, தாசில்தார் நக்கீரன், மத்திய பல்கலைகழக பதிவாளர் சுலோச்சனாசேகர், குறுங்காடு கண்காணிப்பு அலுவலர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காட்டூர், அம்மையப்பன் பகுதி முதியோர் இல்லங்கள் சரியாக செயல்படுகிறதா? appeared first on Dinakaran.

Tags : Kattur ,Ammaiyappan ,Tiruvarur ,Keradacherry Union ,Tiruvarur district ,
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு